நாகையில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 19-ந்தேதி நடக்கிறது
நாகையில், மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
நாகப்பட்டினம்,
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணா தலைமையில் தமிழகஅரசு அமைந்தவுடன் 1967-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட சட்டசபை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1969-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி தமிழ்நாடு என்று நமது மாநிலத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை சிறப்பிக்கும் பொருட்டு விளையாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நாகையில் வரும் 19-ந்தேதி (வியாழக்கிழமை) நடத்தப்பட உள்ளது. இந்த விளையாட்டு போட்டிகள் காலை 9 மணி முதல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தப்பட உள்ளது.
இதில் 100 மீட்டர் ஓட்ட போட்டி, உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவிற்கு தனித்தனியாக நடத்தப்படவுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் 31.12.2017 அன்று 21 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2,500-மும், இரண்டாம் பரிசாக ரூ.1,500-மும், மூன்றாம் பரிசாக ரூ.1,000-மும் வழங்கப்பட உள்ளது. மேற்படி மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர். போட்டியில் கலந்து கொள்பவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தது 5 வருடங்களாவது வசித்து இருக்க வேண்டும். அதற்குரிய ஆதாரங்கள் நாகை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு இதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story