சேலம் அருகே காலி இடத்தில் முட்புதர்களை அகற்றும் பணிகள் தீவிரம்


சேலம் அருகே காலி இடத்தில் முட்புதர்களை அகற்றும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 13 July 2018 10:00 PM GMT (Updated: 13 July 2018 6:51 PM GMT)

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள காலி இடத்தில் முட்புதர்களை அகற்றி சமன் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவில் சமூக விரோத செயல்கள் நடப்பதால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சேலம்,

சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மதுரை, நாமக்கல், திருநெல்வேலி, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, பெங்களூரு, சென்னை, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி, வேலூர் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் எப்போதும் காணப்படுவதுண்டு.

குறிப்பாக இரவு நேரங்களில் பயணிகள் வெளியூர் செல்லவும், வெளியூர்களில் இருந்து சேலத்திற்கு திரும்பி வர வேண்டியிருப்பதாலும் அதிகளவில் பயணிகளின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தாலும், சில நேரங்களில் பயணிகளிடம் நகை, பணம் பறிப்பு சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

இதுஒருபுறம் இருக்க, இரவு நேரங்களில் சேலம் புதிய பஸ்நிலையத்தில் திருநங்கைகளின் தொந்தரவுகள் நாளுக்குள் நாள் அதிகரித்து கொண்டே வருவதாகவும், வெளியூர்களில் இருந்து வரும் இளைஞர்களை திருநங்கைகள் ஆசைவார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று அவர்களை தாக்கி பணம், தங்க செயின்களை பறித்து செல்லும் சம்பவமும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுதவிர, பயணிகளை நோட்டமிட்டு பின் தொடர்ந்து செல்லும் திருடர்கள், ஒரு கட்டத்தில் நகை, பணத்தை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள மறைவான இடத்தில் தஞ்சம் அடைந்துவிடுகிறார்கள். இதனால் திருடர்கள் எங்கு சென்றார்கள்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது.

புதிய பஸ்நிலையத்தில் பஸ்கள் உள்ளே செல்லும் பகுதியில் சுமார் 5 ஏக்கரில் காலி இடம் இருக்கிறது. பல ஆண்டுகளாக காலி நிலமாக காட்சியளித்த இங்கு செடி, கொடிகள் என முட்புதர்கள் அதிகளவில் முளைத்திருந்தன.

மேலும், மாநகரில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் வண்டிகளில் ஏற்றி வந்து இங்கே கொட்டிவிட்டு செல்வதுண்டு.

இதனால் அடர்ந்து காடு மாதிரி காட்சி அளித்ததால் பொதுமக்கள் யாரும் உள்ளே செல்வதில்லை. ஆனால் சிலர் அத்துமீறி உள்ளே சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், இரவு நேரங்களில் விபசார அழகிகள் இளைஞர்களை ஆசை வார்த்தை கூறி அங்கு அழைத்து செல்வதாகவும் தொடர்ந்து போலீசாருக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் புகார்கள் சென்றது.

இந்தநிலையில், காலி இடத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற போலீசாரின் வேண்டுகோளை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்தது. அதன்படி தற்போது மாநகராட்சிக்கு சொந்தமான அந்த இடத்தில் உள்ள முட்புதர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பள்ளமான இடங்களில் டிராக்டர்களில் இருந்து மண் கொண்டு வந்து கொட்டி சமப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே இனிமேல் சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று பள்ளப்பட்டி போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறுகையில், புதிய பஸ்நிலையம் அருகே சுமார் 4½ ஏக்கர் நிலம் மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ளது. ஆனால் அந்த இடம் தனியார் ஒருவருக்கு சொந்தம் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் அந்த இடத்தை பராமரிப்பு செய்யாமல் விட்டுவிட்டதால் முட்புதர்களாக மாறிவிட்டது.

ஆனால் இரவு நேரங்களில் சில சமூக விரோத செயல்கள் நடப்பதால் அதை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தற்போது காலி இடத்தை சமன் செய்யும் பணிகள் நடைபெறுகிறது. மற்றபடி அங்கு வேறு ஏதும் புதிய கட்டிடமோ, அல்லது பூங்காவோ வரவில்லை, என்றார்.

Next Story