கொங்கனப்பள்ளி கிராமத்தில் மின்இணைப்பு வழங்கும் பணி தீவிரம்


கொங்கனப்பள்ளி கிராமத்தில் மின்இணைப்பு வழங்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 July 2018 3:15 AM IST (Updated: 14 July 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ செய்தி எதிரொலியாக கொங்கனப்பள்ளி கிராமத்தில் மின் இணைப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தமிழக எல்லையில் கொங்கனப்பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் 2015-2016-ம்ஆண்டு இந்திரா காந்தி திட்டத்தின் கீழ் 20 குடியிருப்பு வீடுகள் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் வீடுகள் வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் அப்பகுதிக்கு மின்சாரவசதி செய்து கொடுக்கப்படாமல் இருந்தது.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் இருளில் தவித்து வந்தனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் விளக்குவெளிச்சத்தில் படித்து வந்தனர். இப்பகுதியில் மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

எனவே, கொங்கனப்பள்ளி கிராமத்திற்கு மின்வசதி செய்து கொடுக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘தினத்தந்தி‘யில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தற்போது கொங்கனப்பள்ளி கிராமத்தில் மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் சில நாட்களில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மின்வசதி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மக்கள் நலன்கருதி செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி‘க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story