விவசாயியை கடத்தி வீட்டிற்குள் அடைத்து வைத்து தாக்குதல்
ரிஷிவந்தியம் அருகே விவசாயியை கடத்தி வீட்டிற்குள் அடைத்து வைத்து தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
ரிஷிவந்தியம்,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணாயிரம் மகன் மணி (வயது 24). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் சத்தியராஜ்(30) மனைவி முத்தம்மாள் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பழக்கம் ஏற்பட்டது. சத்தியராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததால் மணி முத்தம்மாளிடம் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டில் உள்ள சத்தியராஜிடம் அவரது உறவினர் பாசார் பகுதியை சேர்ந்த முருகன்(23), முத்தம்மாளுக்கும் மணிக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக கூறினார். இதில் ஆத்திரமடைந்த சத்தியராஜ், மணியை காரில் கடத்தி செல்லுமாறும் தான் உடனே வெளிநாட்டில் இருந்து திரும்பி வருவதாகவும் முருகனிடம் தெரிவித்தார்.
இதையடுத்து முருகன், புதுப்பேட்டையை சேர்ந்த அய்யப்பன் ஆகியோர் கடந்த 10-ந்தேதி மணியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று, திருக்கோவிலூர் அருகே கோமாலூரில் உள்ள அய்யப்பனின் உறவினர் வீட்டில் அடைத்து வைத்து, முத்தம்மாளுடன் உள்ள பழக்கத்தை கைவிடுமாறு கூறி அவரை ஆபாசமாக திட்டி தாக்கினர்.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்த சத்தியராஜ் தனது தம்பி விக்னேஷ், மற்றும் முருகன், அய்யப்பன் ஆகியோருடன் சேர்ந்து மணியை மாடாம்பூண்டி வனப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு வைத்து மணியை சரமாரியாக தாக்கினர். அப்போது அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், அத்தியூர் பகுதிக்கு மணியை அழைத்து வந்தனர்.
இதற்கிடையே எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மணியின் அண்ணன் வெங்கடேசன், மணியை சத்தியராஜ் உள்ளிட்டோர் கடத்தி செல்வதை கண்டு அவர்களை தடுத்தார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் 4 பேரும் வெங்கடேசனை தாக்கினர்.
அப்போது வெங்கடேசனும், மணியும் அவர்களிடம் இருந்து தப்பி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டபடி அத்தியூர் கிராமத்துக்குள் ஓடினர். இந்த சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள், சத்தியராஜ், விக்னேஷ், முருகன் ஆகியோரை மடக்கி பிடித்து தாக்கினர். இதை பார்த்ததும் அய்யப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து கிராம மக்கள் பிடிபட்ட 3 பேரையும் பகண்டைகூட்ரோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியராஜ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அய்யப்பனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story