வீடுகளில் கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் அரசு மானியம்
நீலகிரி மாவட்டத்தில் வீடுகளில் கழிப்பறை கட்ட ரூ.12ஆயிரம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. இதனை வீட்டு உரிமை யாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரி வித்துள்ளார்.
ஊட்டி,
இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் அனைத்து நபர்களும் தூய்மை பாரத இயக்கத்தின் (ஊரகம்) கீழ், தங்களது வீடுகளில் தனிநபர் இல்ல கழிப்பறைகள் அமைத்து அதன் மூலம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வினை வாழ்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தனிநபர் இல்ல கழிப்பறைகள் அமைக்க அரசு ஊக்கத்தொகையாக ரூ.12 ஆயிரம் வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி ஊரக பகுதிகளில் வசிக்கும் அனைவரும் தனிநபர் இல்ல கழிப்பறைகளை கட்டி, திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை மாற்றிட மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் கிராமப்புற பகுதிகளின் சுற்றுப்புறம் தூய்மையாக மாறுவது மட்டுமல்லாமல் திறந்த வெளியில் மலம் கழித்தலால் ஏற்படும் நோய்களில் இருந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதுகாக்கப் படுகின்றனர். ஆனால், ஊரக பகுதிகளில் வாடகை வீட்டில் வசிக்கும் பெரும்பான்மையான நபர்கள் மற்றும் தேயிலை தோட்ட குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பது தெரியவந்து உள்ளது. மேலும், சில உரிமையாளர்கள் வீடுகளை வாடகைக்கு விட்டு வெளியூரில் வசிப்பதும் தெரிய வருகின் றது. ஊரக பகுதிகளில் வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு, அதன் மூலம் வாடகை தொகையை பெற்று வரும் வீட்டின் உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு தனிநபர் இல்ல கழிப்பறைகளை கட்டி கொடுக்க வேண்டியது கட்டாய கடமையாகும்.
அதேபோல் தனியார் தேயிலை தோட்ட குடியிருப்புகளில் வசிக்கும் நபர்களுக்கு தனிநபர் இல்ல கழிப்பறைகளை கட்டி கொடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட தேயிலை தோட்ட உரிமையாளர்களின் கடமை. எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் ஊரக பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு விட்டு உள்ள வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் தனியார் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் ஆகியோர் தங்களது கடமைகள் மற்றும் பொறுப்பை உணர்ந்து நீலகிரி மாவட்டத்தை முற்றிலும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக விரைவில் மாற்றவும், கழிப்பறைகளை கட்டவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story