மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தமிழகத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி கிடைத்துள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தமிழகத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி கிடைத்துள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 13 July 2018 11:15 PM GMT (Updated: 13 July 2018 9:03 PM GMT)

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தமிழகத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி கிடைத்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரை காளவாசலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:- மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப ஏராளமான திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்ஒரு பகுதியாக காளவாசலில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, மதுரையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய உயர்மட்ட மேம்பாலம் ரூ.54.70 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 8.40 மணிக்கு நடக்கிறது. அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகின்றனர். இந்த பாலம் 6 மாதத்தில் கட்டி முடிக்கப்படும். இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, பரவையில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. அதில் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் கலந்து கொள்கின்றனர்.


மதுரையில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு திட்டப்பணிகள் நடைபெற உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பஸ் நிலையம் மற்றும் காம்பளக்ஸ் பஸ் நிலையம் இணைக்கப்படுகிறது. வைகை கரையின் இருபுறமும் சீரமைக்கப்படுகின்றன. மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பழைய சென்ட்ரல் மார்க்கெட் இடத்தில் அடுக்குமாடி வாகன காப்பகம் அமைக்கப்படுகிறது. குருவிக்காரன் சாலை, பழைய குயவர்பாளையம்-தெற்கு வாசல் ஆகியவற்றை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இது தவிர மதுரை மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் ரூ.1,650 கோடி செலவில் பெரியார் அணையில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தமிழகத்தில் ரூ.75 ஆயிரம் கோடி நிதி கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story