அரசு அலுவலகங்கள் முன் மாதிரியாக விளங்க வேண்டும்


அரசு அலுவலகங்கள் முன் மாதிரியாக விளங்க வேண்டும்
x
தினத்தந்தி 14 July 2018 4:00 AM IST (Updated: 14 July 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பில் அரசு அலுவலகங்கள் முன் மாதிரியாக விளங்க வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.

பெரம்பலூர்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி 110-ன் மூலம் தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி இத்திட்டத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் பொருட் களின் பயன்பாட்டை தடை செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கலெக்டர் சாந்தா தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை குறைக்கும் வகையிலும், அதற்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும், தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை குறைத்தல் தொடர்பான பயிற்சி பட்டறை வகுப்பில் ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான நடைமுறை சாத்தியங்கள் குறித்தும், மாற்று பொருட்கள் பயன்பாடுகள் குறித்தும், அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தினை பெரம்பலூர் மாவட்டத்தில் முழுமையாக அமல்படுத்த அரசு அலு வலர்களும், பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை அனைத்து அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். இதன் மூலம் அரசு அலுவலகங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பில் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக விளங்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) டாக்டர் சசிகலா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story