சேதராப்பட்டு இரும்பு தொழிற்சாலையில் திடீர் தீ பயங்கர சத்தத்துடன் பொருட்கள் வெடித்து சிதறியதால் பதற்றம்


சேதராப்பட்டு இரும்பு தொழிற்சாலையில் திடீர் தீ பயங்கர சத்தத்துடன் பொருட்கள் வெடித்து சிதறியதால் பதற்றம்
x
தினத்தந்தி 14 July 2018 5:00 AM IST (Updated: 14 July 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள இரும்பு பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்தது. இதில் பயங்கர சத்தத்துடன் பொருட்கள் வெடித்து சிதறியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.


காலாப்பட்டு,

புதுவையை அடுத்த சேதராப்பட்டில் பிப்டிக் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு சிறிய, பெரிய அளவில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பிரபல நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றும் இயங்கி வருகிறது. இங்கு கட்டிட கட்டுமானப் பணிக்கு தேவையான இரும்பு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இங்கு வழக்கம்போல் நேற்று தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் இரும்பு கம்பிகள், இரும்பு சட்டங்கள், பிளேட்டுகள் ஆகியவை துருப்பிடிக்காமல் இருப்பதற்காக தொழிற்சாலையில் உள்ள ஒரு பெரிய தொட்டியில் அதாவது 12 ஆயிரத்து 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் நிரப்பப்பட்ட பெயிண்டில் மூழ்க வைத்து எடுப்பது வழக்கம்.


இந்த பிரிவில் திடீரென நேற்று பகல் 3 மணி அளவில் ‘டமார்’ என பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பீதி அடைந்த தொழிலாளர்கள் அனைவரும் ஏதோ விபரீதம் நடந்துள்ளது என கருதி அலறியடித்துக்கொண்டு தொழிற்சாலையை விட்டு அவசர அவசரமாக வெளியேறிசேதராப்பட்டு மெயின் ரோட்டுக்கு வந்து நின்றனர்.

சிறிது நேரத்தில் அந்த தொழிற்சாலையில் இருந்த பெயிண்டு தொட்டி தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அதன் அருகில் இருந்த ரசாயன பொருட்கள் அடங்கிய சிலிண்டர் மற்றும் பெயிண்டு டப்பாக்களிலும் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் தீ மளமளவென பரவி, அந்த பகுதியே புகை மண்டலமாக இருந்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது.


இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சேதராப்பட்டு தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்ததும் உடனடியாக அருகில் உள்ள கோரிமேடு தீயணைப்பு நிலையம், தமிழக பகுதியான வானூரில் உள்ள தீயணைப்பு நிலையம் ஆகியவற்றுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தொழிற்சாலையில் தீப்பற்றிய பொருட்களுள் ரசாயன பொருட்களும் இருந்ததால் தீயை அணைப்பது என்பது தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.

அதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் மற்றும் வில்லியனூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். மதியம் 3 மணியளவில் பிடித்த தீ, மாலை 5 மணி அளவில் முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் வேலை பார்த்த 2 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி தகவல் அறிந்ததும் புதுச்சேரி வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங், கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

தீவிபத்து குறித்து சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழிற்சாலையில் தீப்பிடித்த சம்பவம் சேதராப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story