பள்ளப்பட்டியில் அம்மா மருந்தகம் தம்பிதுரை- விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர்


பள்ளப்பட்டியில் அம்மா மருந்தகம் தம்பிதுரை- விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர்
x
தினத்தந்தி 13 July 2018 9:41 PM GMT (Updated: 13 July 2018 9:41 PM GMT)

பள்ளப்பட்டியில் அம்மா மருந்தகத்தினை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி ஒன்றியம் பள்ளப்பட்டியில் அம்மா மருந்தகத்தை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மூலம் கரூர் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் கரூரின் மையப்பகுதியில் அம்மா மருந்தகம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதேபோன்று பள்ளப்பட்டி பகுதியிலுள்ள மக்கள் பயனடையும் வகையில் பள்ளப்பட்டியிலும் அம்மா மருந்தகம் திறக்கப்பட்டது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இங்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள 5,000 மருந்து வகைகள் உள்ளது. உயிர் காக்கும் மருந்து வகைகளும் உள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மருந்து வகைகளும் 15 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கும். மேலும் டோர் டெலிவரி வசதியும் உள்ளது. இம்மருந்தகத்தில் மருந்து வகைகள் கூட்டுறவு மையக்கொள்முதல் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கணினியில் பதிவு செய்து விற்பனை செய்யப்படுகிறது என கூட்டுறவு விற்பனை பண்டக சாலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாகம்பள்ளி ஊராட்சி மலைக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.13 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும், வெங்கிடாபுரம் பகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தையும் அப்பகுதி மாணவ- மாணவிகள் பயனடையும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, அரவக்குறிச்சி வட்டாட்சியர் பிரபு, கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாக இயக்குனர் கணேசன், தலைவர் வை.நெடுஞ்செழியன் துணை பதிவாளர் ஜெயபிரகலாதன், மேலாண்மை இயக்குனர் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story