கும்மிடிப்பூண்டி அருகே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் தேசிய நெடுஞ்சாலை


கும்மிடிப்பூண்டி அருகே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் தேசிய நெடுஞ்சாலை
x
தினத்தந்தி 13 July 2018 9:54 PM GMT (Updated: 13 July 2018 9:54 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உரிய பராமரிப்பு பணி நடைபெறாததால், மேம்பாலங்களின் ஓரத்தில் செடி புதர்கள் மண்டியும், சாலைகள் குண்டும், குழியுமாகவும் காட்சியளிக்கின்றன.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக முறையாக பராமரிப்பு பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ளவில்லை. இதனால் தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக மாறி உள்ளது.

குறிப்பாக தச்சூர் கூட்டுச்சாலை முதல் ஆரம்பாக்கம் வரை தேசிய நெடுஞ்சாலையையொட்டி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிக அளவில் பயன்படுத்தி வரும் சர்வீஸ் சாலைகள் விபத்துகளின் பிறப்பிடமாகவும், மனித உயிர்களின் இறப்பிடமாகவும் இருந்து வருகிறது.

தேசிய நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்காமல் அத்துறை சார்ந்த அதிகாரிகள், அலட்சியம் காட்டும் செயலால் மனித உயிர் இழப்பு ஏற்படுகிறது. அவர்களை நம்பி இருக்கும் குடும்பமே சூழ்நிலை கைதியாக நடுத்தெருவுக்கு வந்து நிற்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது.

சாலைகளில் மரண பள்ளங்கள் மட்டுமின்றி ஓரங்களிலும், நடுவே உள்ள தடுப்புகளிலும் புதர்கள் மண்டி கிடக்கின்றன. குறிப்பாக எளாவூர் மற்றும் கவரைப்பேட்டை மேம்பாலங்களில் இத்தகைய நிலை இருந்து வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணத்தில் இருந்து ஒரு சிறிய தொகையை பராமரிப்பு செய்ய செலவு செய்தால் மனித உயிர்களை காக்கலாம். எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொண்டு சாலைகளின் தரத்தை காப்பதின் மூலம் விலை மதிப்பில்லா மனித உயிர்களையும் காக்க முடியும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story