காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள்; அதிகாரி ஆய்வு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள்; அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 14 July 2018 3:44 AM IST (Updated: 14 July 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.7 கோடி மதிப்பில் 31 ஏரிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட வெள்ள தடுப்பு பாதுகாப்பு அதிகாரி அமுதா ஆய்வு செய்தார்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 928 ஏரிகள் உள்ளன. இதில் 2018 -2019-ம் ஆண்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள 31 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பணி ரூ.7 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த 31 ஏரிகளிலும் நீர்வரத்து கால்வாய், ஏரிகள், மதகுகள் போன்றவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் படப்பை ஏரிக்கு ரூ.45 லட்சமும், மணிமங்கலம் ஏரிக்கு ரூ.30 லட்சமும், ஆதனூர் ஏரிக்கு ரூ.20 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தது. தற்போது இந்த பகுதிகளில் உள்ள ஏரிகளில் உள்ள நீர் பாசன பகுதியில் நடைபெற்று வந்த பணிகள் முடியும் தறுவாயில் உள்ளது.

இந்த பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட வெள்ளத்தடுப்பு பாதுகாப்பு அதிகாரி அமுதா நேற்று நேரில் ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரமேஷ், குன்றத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எழிச்சூர் ராமச்சந்திரன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துனைத்தலைவர் ஆதனூர் சசிகுமார். செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணா, உதவி பொறியாளர் குஜராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Next Story