வாலிபரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலை மறியல்


வாலிபரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 14 July 2018 4:29 AM IST (Updated: 14 July 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே, வண்டல் மண் ஏற்றிச் சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தபோது, வாலிபர் ஒருவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெய்க்காரப்பட்டி,

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி அருகே சின்னக்காந்திபுரம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து போலி ஆவணம் மூலம் சிலர் டிப்பர் லாரிகளில் வண்டல் மண் அள்ளிச்சென்றதாக கூறப்படுகிறது. தினசரி 100-க்கும் மேற்பட்ட லாரிகள் அப்பகுதிக்கு வந்து வண்டல் மண்ணை அள்ளிச்சென்றதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் வண்டல் மண்ணை அள்ளிச்செல்வதற்காக வரும் லாரிகள் சின்னக்காந்திபுரம் பகுதியில் அதிவேகமாக இயக்கப்படுவதாகவும், இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாவதாகவும் புகார் எழுந்தது. மேலும் அப்பகுதியில் சாலையும் சேதமடைந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று அப்பகுதியில் மண் அள்ளி வந்த 30-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாதாரண உடையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜிக்கும், லாரிகளை சிறைபிடித்தவர்களில் ஒருவரான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சப்-இன்ஸ்பெக்டர், மணிகண்டனின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போலீசார் மண் அள்ளுபவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி சின்னக்காந்திபுரம் பஸ் நிறுத்தம் அருகே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பழனி பயிற்சி போலீஸ் துணை சூப்பிரண்டு பரத் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இனிவரும் காலங்களில் சின்னக்காந்திபுரம் பகுதியில் லாரிகள் மூலம் மண் அள்ளாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மணிகண்டனை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story