பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் உயருகிறது


பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் உயருகிறது
x
தினத்தந்தி 14 July 2018 4:40 AM IST (Updated: 14 July 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியில் பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மேலும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிக்கப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி, 

வால்பாறை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர்.

இதற்கிடையில் அவ்வப்போது காட்டாற்று வெள்ளத்தில் மரங்கள், பாறைகள் தண்ணீரில் அடித்து வருவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டு உள்ள தடையை வனத்துறையினர் நீடித்து உள்ளனர். சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்வதை தடுக்க நுழைவு பகுதியில் செடி, கொடிகளை வெட்டி போட்டு அடைத்து வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வனப்பகுதியில் பெய்யும் மழை மூலம் வால்பாறை மலைப்பாதையில் ஆங்காங்கே சிற்றோடைகள் உருவாகி உள்ளன. இந்த நீரோடைகளிலும் அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதனால் வால்பாறை மலைப்பாதையில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் 160 அடி கொள்ளளவுள்ள சோலையார் அணைதனது முழு கொள்ள ளவையும் எட்டியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதாலும், அணையின் பாதுகாப்பு கருதி சோலையாரில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு சேடல்பாதை வழியாகவும், மானாம்பள்ளியில் உள்ள மாற்றுப்பாதை வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் பரம்பிக்குளம் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 40.50 அடியாக உயர்ந்து உள்ளது.

மேலும் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 987 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி வரை உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 239 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

Next Story