சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ‘அன்புச்சுவர்’ திறப்பு


சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ‘அன்புச்சுவர்’ திறப்பு
x
தினத்தந்தி 13 July 2018 11:18 PM GMT (Updated: 13 July 2018 11:18 PM GMT)

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ‘அன்புச்சுவர்’ திறக்கப்பட்டுள்ளது. இதில் வைக்கப்படும் ஆடைகளை ஏழை மக்கள் எடுத்துக் கொள்ளலாம்.

சென்னை,

வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதை தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஏழை மக்களுக்கு பயன்படுத்துவதற்காக ‘அன்புச்சுவர்’ எனப்படும் இலவச சேமிப்பு கிடங்குகள் பல இடங்களில் திறக்கப்பட்டுள்ளன.

தற்போது சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆராய்ச்சி நிலைய ஆஸ்பத்திரியில் ‘ஆத்திச்சூடி’ என்ற பெயரில் அன்புச்சுவர் திறக்கப்பட்டுள்ளது. ‘இயல்வது கரவேல்’ என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் அரசர் சீராளர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக பல ஊர்களில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெறும் குழந்தைகள் ஆடை இல்லாமல் இருப்பதை கண்டு எனது மனம் வெம்பியது. எனவே ‘அன்புச்சுவர்’ அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அதன்படி தற்போது ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் ஊட்டும் தாய் சிலை அருகே ஏழை மக்களுக்காக ‘அன்புச்சுவர்’ திறக்கப்பட்டது. இதில் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் வழங்கிய ஆடைகள், காலணிகள், புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

உடை இல்லாமல் இருக்கும் குழந்தைகள் அவர்களுடைய உயரம், எடைக்கு ஏற்ப விருப்பப்பட்ட துணிகளை எடுத்து உடுத்திக் கொள்ளலாம். பெரியவர்களுக்கான துணிகளும் வைக்கப்பட்டு உள்ளன. இந்த ‘அன்புச்சுவரில்’ பொதுமக்களும் தங்களுடைய பொருட்களை வைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் திறக்கப்பட்ட ‘அன்புச்சுவர்’ மற்ற ஆஸ்பத்திரிகளிலும் திறக்கப்பட வேண்டும் என்பதே ஏழை நோயாளிகள், பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story