வில்லிவாக்கத்தில் பள்ளி அருகே இருந்த மதுக்கடை மூடல் மாணவர்கள் மகிழ்ச்சி


வில்லிவாக்கத்தில் பள்ளி அருகே இருந்த மதுக்கடை மூடல் மாணவர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 14 July 2018 5:00 AM IST (Updated: 14 July 2018 5:00 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வில்லிவாக் கத்தில் பள்ளி அருகே இருந்த மதுக்கடை மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை,

சென்னை வில்லிவாக்கம் தெற்கு மாடத்தெருவில் அரசு உதவி பெறும் எஸ்.கே.டி.டி. பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். எஸ்.கே.டி.டி. பள்ளியின் நுழைவு வாயிலில் மேட்டுத்தெருவில் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பார் செயல்பட்டு வந்தது. அதில் மது அருந்தும் சில குடிமகன்களால், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடுமையான துன்பத்துக்கு ஆளாகினர்.

மேலும் பள்ளியில் பாடம் படிக்கும்போதும், பார்களின் குடிமகன்கள் செய்யும் கடுமையான அட்டகாசத்தினால் தொல்லைகளை சந்தித்து வந்தனர். இதனால் மாணவர்கள் தவறான பாதைக்கு திசை திரும்பும் சூழல் இருந்தது. இதையடுத்து விதிமுறையை மீறி பள்ளியின் அருகே செயல்படும் மதுக்கடையை மாணவ- மாணவிகளின் நலன் கருதி மூடவேண்டும் என்று ‘தினத்தந்தி’யில் கடந்த 10-ந் தேதியன்று செய்தி வெளியானது.

‘தினத்தந்தி’ செய்தியின் எதிரொலியாக எஸ்.கே.டி.டி. பள்ளியின் எதிரே செயல்பட்டு வந்த மதுக்கடை மூடப்பட்டது. இதற்கு எஸ்.கே.டி.டி. பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் மதுக்கடையால் தாங்கள் சந்தித்து வந்த தொல்லைகளுக்கு முடிவு ஏற்பட்டிருப்பது, அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அளப்பரியா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கதவு மூடப்பட்டால், இன்னொரு கதவு திறக்கும் என்பார்கள். அதுபோல மதுக்கடையின் கதவு மூடப்பட்டுள்ளதால், மாணவ- மாணவிகள் செல்வதற்கு தடை விதித்து மூடி வைக்கப்பட்டிருந்த பள்ளியின் நுழைவு வாயில் கதவு மீண்டும் திறக்கப்பட உள்ளது. பள்ளியின் அருகே அறிவாற்றலை பெருக்கும் வகையில் நூலகம் அமைத்து தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவ-மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மதுக்கடை மூடப்பட்டாலும் அதன் அருகே பார் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து சட்டவிரோதமாக குடிமகன்கள் அதிக விலை கொடுத்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

மாணவ-மாணவிகளுக்கு மீண்டும் தொல்லைகளை ஏற்படுத்துவதற்கு முன்பு, அதனை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story