ஈரோடு மாவட்டத்தில் உணவுப்பொருட்கள் வழங்குதல் தொடர்பாக மக்கள் குறைகேட்பு கூட்டம் இன்று நடக்கிறது
ஈரோடு மாவட்டத்தில், உணவுப்பொருட்கள் வழங்குதல் தொடர்பாக மக்கள் குறைகேட்பு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
ஈரோடு,
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதில் உள்ள குறைபாடுகள் குறித்தும், புதிய ரேஷன் கார்டு பெறுவது குறித்தும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நாளை (சனிக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் நடக்கிறது. இதில் உயர்நிலை அதிகாரிகள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய உள்ளனர். கூட்டம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் விவரம் வருமாறு:-
ஈரோடு தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு ஒண்டிகாரன்பாளையம் ரேஷன் கடையிலும், கொடுமுடி தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு சாணார்பாளையம் சமுதாய கூடத்திலும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இந்த 2 கூட்டங்களுக்கும் ஈரோடு ஆர்.டி.ஓ. தலைமை தாங்குகிறார்.
மேலும் பெருந்துறை தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு முள்ளம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி தலைமையிலும், பவானி தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு புதுப்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி தலைமையிலும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
கோபிசெட்டிபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு பொலவக்காளிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலும், நம்பியூர் தாலுகாவில் கடத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இந்த 2 கூட்டங்களுக்கும் கோபி ஆர்.டி.ஓ. தலைமை தாங்குகிறார்.
சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு விண்ணப்பள்ளி சமுதாய கூடத்திலும், தாளவாடி தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு ஒசூர் சமுதாய கூடத்திலும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இந்த 2 கூட்டங்களுக்கும் ஈரோடு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தலைமை தாங்குகிறார். அந்தியூர் தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு வெள்ளித்திருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி தலைமையிலும், மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு நாதகவுண்டன்பாளையம் ரேஷன் கடையில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
பொது வினியோக திட்டத்தின்கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் இக்கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி தாசில்தார், கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர், கூட்டுறவு சங்க செயலாளர் சம்மந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.
எனவே பொதுமக்கள், பொது வினியோக திட்ட ரேஷன் கடைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் புதிய ரேஷன் கார்டு பெறுவதில் உள்ள சிரமங்கள் தொடர்பான தங்களது கருத்துக்களை வருகைதர உள்ள அதிகாரிகளிடம் நேரில் தெரிவித்தும், மனுக்கள் அளித்தும் அதற்கான தீர்வுகளை பெற்று பயன்அடையலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story