மலைப்பகுதி ஊராட்சிகளை ஒன்றிணைத்து கடம்பூரில் ஊராட்சி ஒன்றியம் அமைக்க நடவடிக்கை மனுநீதி நாள் முகாமில், கலெக்டர் தகவல்


மலைப்பகுதி ஊராட்சிகளை ஒன்றிணைத்து கடம்பூரில் ஊராட்சி ஒன்றியம் அமைக்க நடவடிக்கை மனுநீதி நாள் முகாமில், கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 July 2018 4:00 AM IST (Updated: 14 July 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

மலைப்பகுதி ஊராட்சிகளை ஒன்றிணைத்து கடம்பூரில் ஊராட்சி ஒன்றியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சத்தியமங்கலத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கோபி ஆர்.டி.ஓ. அசோகன் வரவேற்று பேசினார்.

இதில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் பேசும்போது கூறியதாவது:-


ஈரோடு மாவட்டத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கோபியில் புதிதாக சி.ஏ. படிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து கடம்பூரில் ஊராட்சி ஒன்றியம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

இதையொட்டி 102 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், 14 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 2 பேருக்கு வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க தலா ரூ.87 ஆயிரத்து 500 நிதி உதவி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் சத்தியமங்கலம் தாசில்தார் கிருஷ்ணன், முன்னாள் கல்வி அதிகாரி துரைசாமி, கிளை கழக செயலாளர்கள் ரகு, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story