குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்


குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 July 2018 5:33 AM IST (Updated: 14 July 2018 5:33 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்,


விருத்தாசலம் அருகே ராஜேந்திரப்பட்டின காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அதில் இருந்து மின்மோட்டார்கள் மூலம் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதுதவிர தெருக்களில் ஆழ்துளை கிணறுகளுடன் மினிகுடிநீர் தொட்டிகள் 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

நல்ல நிலையில் இயங்கி வந்த இந்த 3 மினி குடிநீர் தொட்டிகள் மற்றும் ஒரு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியின் மின்மோட்டார்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து பழுதடைந்து போனது. மற்றொரு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் மட்டுமே காலனி பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் முறையாக வழங்குவதில்லை. வழங்கப்படும் குடிநீரும் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட காலனி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் காலனி பகுதி மக்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இக்கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் தண்டபாணியிடம் பழுதடைந்த மின்மோட்டார்களை சரி செய்து தடையின்றி குடிநீர் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது கலெக்டர் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து சென்றார். அதன்பிறகும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த காலனி பொதுமக்கள், காலி குடங்களுடன் மேல்நிலை நீர்தேக்க தொட்டி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பழுதடைந்த மின்மோட்டார்களை சரி செய்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் எனவும், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோஷமிட்டனர்.

மேலும் காலனி மக்கள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.

இதுகுறித்து காலனி பகுதி மக்கள் நிருபர்களிடம் கூறுகையில், குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வரை கருப்பு கொடியை இறக்க மாட்டோம். எனவே அதிகாரிகள் பழுதடைந்த மின் மோட்டார்களை சரி செய்து குடிநீர் வழங்காவிட்டால் விரைவில் விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதுடன் அங்கேயே சமையல் செய்து சாப்பிடும் போராட்டம் நடத்துவோம் என கூறிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story