3½ வயது சிறுவனை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை


3½ வயது சிறுவனை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 14 July 2018 12:08 AM GMT (Updated: 14 July 2018 12:08 AM GMT)

வேப்பூர் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் 3½ வயது சிறுவனை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது.

கடலூர், 

இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி பரமேஸ்வரி(வயது 21). இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு முன்பு பரமேஸ்வரிக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே காதல் இருந்தது. இதனால் பரமேஸ்வரியை அவரது பெற்றோர் தங்கள் உறவினர் மகன் ராமருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் திருமணத்துக்கு பிறகு ராமர் வெளிநாட்டில் வேலை பார்க்க சென்று விட்டார். இதனால் பரமேஸ்வரி தனது காதலனுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தார். இவர்களின் கள்ளத்தொடர்பு விவகாரம் பரமேஸ்வரியின் பக்கத்து வீட்டுக்காரரான முருகேசனுக்கு தெரியவந்தது. இதனை முருகேசன், பரமேஸ்வரியின் கணவர் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

இதனால் முருகேசன் மீது பரமேஸ்வரிக்கு கோபம் வந்தது. தனது கள்ளத்தொடர்பு விவகாரத்தை வெளியில் சொன்ன முருகேசனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று துடித்தார். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந் தார். சம்பவத்துக்கு 6 நாட்களுக்கு முன்பு முருகேசன் மனைவி சங்கீதாவுக்கும், பரமேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சங்கீதா சொன்ன வார்த்தைகள் பரமேஸ்வரிக்கு மேலும் ஆத்திரம் ஊட்டியது.

கடந்த 23-8-2016 அன்று மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய முருகேசனின் 3 குழந்தைகளும் புத்தக பைகளை வீட்டில் வைத்து விட்டு பரமேஸ்வரியின் வீட்டுக்கு சென்று டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தனர்.

முருகேசனை பழிவாங்க இதுவே சரியான தருணம் என கருதிய பரமேஸ்வரி, முருகேசனின் மகன் நித்தீசை(3½) தனியாக அழைத்துக்கொண்டு முருகேசனின் வீட்டின்பின்புறம் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அங்கு நித்தீசின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்து கழிப்பறைக்குள் போட்டார்.

இந்த நிலையில் வெகுநேரமாகியும் மகன் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த முருகேசனும், சங்கீதாவும் தேடிப்பார்த்த போது, தங்கள் வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறைக்குள் நித்தீஷ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதனர்.

இந்த குறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமேஸ்வரியை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்ததால் நீதிபதி லிங்கேஷ்வரன் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், பரமேஸ்வரியின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தார். மேலும் பரமேஸ்வரிக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையில் முதல் 2 ஆண்டுகளை அவர் கடுங்காவல் தண்டனையாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் க.செல்வபிரியா ஆஜரானார். 

Next Story