மாவட்ட செய்திகள்

முதல்-மந்திரி குமாரசாமியுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் சந்திப்பு + "||" + MS Swaminathan meeting with chief Chief Minister Kumarasamy

முதல்-மந்திரி குமாரசாமியுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் சந்திப்பு

முதல்-மந்திரி குமாரசாமியுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் சந்திப்பு
முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்து பேசிய எம்.எஸ்.சுவாமிநாதன், தோட்டக்கலைத்துறையை பலப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
பெங்களூரு,

முதல்-மந்திரி குமாரசாமியை பெங்களூரு விதான சவுதாவில் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்த ஆலோசனை வழங்குமாறு அவரிடம் குமாரசாமி கேட்டார். அதற்கு பதிலளித்த எம்.எஸ்.சுவாமிநாதன், விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்த தோட்டக்கலை பயிர் துறையை பலப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.


அவர் பேசுகையில், “நாட்டிலேயே ஜனநாயக நடைமுறை கர்நாடகத்தில் தான் சிறப்பான முறையில் உள்ளதாக அப்போது அவர் பாராட்டினார். கர்நாடகத்தில் கடலோர பகுதி அதிகமாக உள்ளது. இங்கு கடல் சார்ந்த விவசாயத்திற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அதற்கு மாநில அரசு முக்கியத்துவம் அளிக்கலாம்.

விவசாய முறையில் சீர்திருத்தம் ஏற்படுத்தும்போது, மண், நீர், பல்லுயிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விவசாயத்தில் இஸ்ரேல் மாதிரியான நீர் நிர்வாகம் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். விவசாய பொருட்கள் பதப்படுத்துதல், விவசாய தொழில்களை கர்நாடகத்தில் தொடங்க வேண்டியது அவசியம். இதில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும்“ என்றார். அப்போது பேசிய குமாரசாமி, “விவசாயத்துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரும்போது உங்களின் அறிவுரைகளை கண்டிப்பாக கவனத்தில் கொள்வேன். அதை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்“ என்றார்.

இந்த சந்திப்புக்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “விவசாயிகளின் நலனுக்காக விவசாய, நீர்ப்பாசன முறையில் சீர்திருத்தம் செய்யப்படும். நான் கேட்டுக்கொண்டதன் பேரில் எம்.எஸ்.சுவாமிநாதன் தனது 93 வயதிலும் விதான சவுதாவுக்கு வந்து என்னை சந்தித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மாவட்ட அளவிலான விவசாயத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தை விரைவில் கூட்டுவேன்“ என்றார்.

இந்த சந்திப்பின்போது, மந்திரிகள் சிவசங்கரரெட்டி, மணகுலி, வெங்கடராவ் நாடகவுடா, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், கூடுதல் தலைமை செயலாளர் டி.வி.பிரசாத், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.