காலத்தின் கடைசிக் கருணை காமராஜர்


காலத்தின் கடைசிக் கருணை காமராஜர்
x
தினத்தந்தி 14 July 2018 9:03 AM IST (Updated: 14 July 2018 9:03 AM IST)
t-max-icont-min-icon

உயரிய அறம் சார்ந்த காந்திய அரசியலில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட கடைசி அரசியல்வாதி காமராஜர். அதனால் தான், “காலத்தின் கடைசிக் கருணை காமராஜர்” என்றார் கண்ணதாசன்.

காமராஜர் வாழ்ந்த விதத்தை, இப்பொழுது நினைத்தால் நம்ப முடியாத ஓர் அதிசயக் கனவு போல் கண் சிமிட்டுகிறது. காந்தியத்தைக் காதலித்து, காந்தியத்தையே கைப்பிடித்து, காந்தியத்திற்காகவே வாழ்ந்து, காந்தி பிறந்த நாளில் கண்மூடிய ‘அத்வைதி’ காமராஜர்.

காமராஜரை நம் மக்கள் ஏன் வணக்கத்திற்குரிய தலைவராக வழிபடுகிறார்கள்? அவருடைய வரலாறு படைத்த ஒன்பதாண்டு ஆட்சிச் சாதனைகளுக்காகவா? ஊழலின் நிழல்படாத உயரிய நிர்வாகத்தை அவர் உருவாக்கித் தந்ததற்காகவா?

அறியாமை இருட்டில் அழுந்திக் கிடந்த பாமரர்களின் இதயத்தில் கல்வி வெளிச்சத்தைப் பாய்ச்சியதற்காகவா? ஆறுகள் ஓடும் இடங்களில் எல்லாம் அணைகளை எழுப்பி விவசாயத்தை வளர்த்ததற்காகவா? தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்திய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தலைநிமிரச் செய்ததற்காகவா?

இவையெல்லாம் அவருடைய தனிப்பெரும் ஆட்சி சாதனைகள்தான். ஆனால் எளிமையும், உண்மையும், நேர்மையும் நிறைந்த அவருடைய தன்னலமற்ற வாழ்க்கைதான் என்றும் வணக்கத்திற்குரியது.

காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக 1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் பொறுப்பேற்ற பின்பும் சென்னை திருமலைப்பிள்ளை வீதியில் இருந்த வாடகை வீட்டிலேயே தொடர்ந்து வசித்தார்.

அவருடைய அன்னையார், “நீ இருக்கும் வீட்டில் ஒரு மூலையில் உனக்கு எந்தச் சிரமமும் தராமல் உன் முகத்தைப் பார்த்தபடி எஞ்சிய காலத்தைக் கழித்து விடுகிறேன்” என்று கண்ணீர் ததும்பச் சொன்ன போதும் அவருடைய கோரிக்கையை மறுதலித்துவிட்டவர் காமராஜர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இரா.கிருஷ்ணசாமி நாயுடுவிடம், “தந்தையில்லாப் பிள்ளையாய் என் தாயார் எவ்வளவு சிரமப்பட்டு என்னை வளர்த்தார்கள் என்பதை நானறிவேன். பாசத்தில் அவரை நான் பக்கத்தில் வைத்துக் கொண்டால் அவரைப் பார்க்க அடிக்கடி பத்து பேர் வருவார்கள். அத்தையைப் பார்க்க வந்தேன், ஆத்தாவைப் பார்க்க வந்தேன் என்பார்கள். ஏதாவது ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள, முதல்-அமைச்சர் வீட்டிலிருந்து பேசுகிறேன் என்று அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். அதனால்தான், அம்மா ஊரிலேயே இருக்கட்டும் என்கிறேன். அவர்கள் தேவைக்குத்தான் மாதம் ரூ.130 அனுப்பி வைக்கிறேனே” என்று சொன்னவர் காமராஜர்.

முற்றும் துறந்த ஆதி சங்கரரும், பட்டினத்தாரும் கூடத் துறக்க விரும்பாத உறவு, தாயின் உறவு. அந்தத் தாயின் உறவையும் பொது வாழ்க்கைத் தூய்மைக்காகத் தள்ளி வைத்த அதிசயமான தலைவர் காமராஜர்.

காமராஜர் தன் அமைச்சரவையில் ஏழு பேரை மட்டும் சேர்த்துக் கொண்டார். தலித்துகளின் தலைவர் இரட்டைமலை சீனிவாசனின் பேரன் பரமேஸ்வரன் என்பவர் அந்த ஏழு அமைச்சர்களில் ஒருவர். சமூக நீதியைச் செயற்படுத்துவதற்காக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காமராஜர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அமைச்சரிடம் அறநிலைத்துறையை அளித்தார்.

“ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரரை அமைச்சராக்கிவிட்டால் எந்த நாலாஞ் சாதியை உள்ளே விடமாட்டோம்னு சொன்னார்களோ, அதே நாலாஞ் சாதிக்காரருக்குப் பரிவட்டம் கட்டிப் பூரண கும்ப மரியாதையுடன் அவர்கள் பணிவோடு கோவிலுக்குள் அழைத்துப் போவார்கள் என்றுதான் பரமேஸ்வரனை நான் இந்து அறநிலைத்துறைக்கு அமைச்சராக்கினேன்” என்று காமராஜர் வாய்வேதம் பேசாமல் சமூக நீதிக்குச் செயல் வடிவம் தந்த தலைவர்.

ஒரு நாள் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் காமராஜரைச் சந்தித்த போது, ‘உங்கள் ஆட்சிச் சாதனைகளை என்றும் மக்கள் நினைவில் நிறுத்துவதற்காக ஒரு நியூஸ் ரீல் எடுத்தால் நல்லது’ என்றார்.

‘நாம் ரோடு போட்டோம். அதன் மேல்தான் மக்கள் நடக்கிறார்கள். பள்ளிக்கூடம் கட்டினோம். அதில்தான் அவர்களுடைய பிள்ளைகள் படிக்கிறார்கள். அணைகளைக் கட்டினோம். அந்தத் தண்ணீரில்தான் விவசாயம் செய்கிறார்கள். இதில் வேறு, விளம்பரப் படம் எதற்கு வீண் செலவு?” என்று கவிஞரின் கருத்தை மறுத்தார் கர்மவீரர்.

“மூன்று லட்சம் ரூபாய் இருந்தால் போதுமய்யா! தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க உதவுகிறார் போல் நல்ல செய்திப் படம் எடுத்து விடலாம்” என்று கவிஞர் சொன்னதும், “அடப்பாவி படமெடுக்கும் மூன்று லட்சத்தில் இன்னும் பத்து ஊர்களில் நான் பள்ளிக்கூடம் கட்டுவேன். பிள்ளைகள் படிக்க வழி சொல்லாமல் ‘நியூஸ் ரீல்’ எடுக்கச் சொல்கிறாயா? முதலில் இங்கிருந்து நடையைக் கட்டு” என்று கொதித்தார் அந்தக் கறுப்புக் காந்தி. அப்படி ஒரு தலைவரை இப்பொழுது பார்க்க முடியுமா?

விருதுநகரில் சுலோச்சன நாடார் தெருவில் உள்ள சாதாரண வீட்டில் தான் காமராஜரின் தாயும் தங்கையும் வாழ்ந்து வந்தனர். அந்த வீட்டில் குடிநீர்க் குழாய் இல்லை. அடுத்த தெருவில் இருந்த ‘முனிசிபாலிடி’ குழாயில் வரிசையில் நின்று தான் காமராஜரின் தங்கை நாகம்மை தண்ணீர் பிடிப்பது வழக்கம்.

உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மஜீத் இந்த நிலையை அறிந்து காமராஜர் வீட்டில் குழாய் இணைப்புக்கு வழிசெய்துவிட்டுக் கோட்டைக்குத் திரும்பினார்.

இதைக் கேள்வியுற்ற காமராஜர் அமைச்சர் மஜீத்தை அழைத்து, “என் வீட்டுக் குழாய் இணைப்புக்கு முறைப்படி நான் முனிசிபாலிடியிடம் விண்ணப்பம் கொடுத்தேனா? அதற்கு 18 ரூபாய் கட்டணம் கட்டினேனா? எப்படி வந்தது குழாய் இணைப்பு? உங்களை நான் நாட்டைப் பார்க்கச் சொன்னேனா, என் வீட்டைப் பார்க்கச் சொன்னேனா? 24 மணி நேரத்திற்குள் அந்தக் குழாய் இணைப்பு துண்டிக்கப்படவேண்டும். பதவியைப் பயன்படுத்தி அவரவர் வீட்டு வேலையைப் பார்த்தால் நாடு உருப்பட்ட மாதிரிதான்” என்று கடும் கோபத்துடன் கண்டித்தார்.

உடனே குழாய் இணைப்பு அறுபட்டது. மீண்டும் முதல்வரின் தங்கை குடத்துடன் அடுத்த தெருவில் தண்ணீருக்காக வரிசையில் நின்றார். பெருந்தலைவரின் வாழ்க்கை முறை இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய் போய்விட்டது.

நாட்டு விடுதலைப் போரில் ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் சிறைவாசம்; பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர்; ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர்; நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர்; ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வர்; ஐந்து ஆண்டுகள் அகில இந்திய காங்கிரசின் தலைவர்; இரண்டு முறை இந்தியப் பிரதமர்களை உருவாக்கிய ஒரே தமிழர். இத்தனை பெருமைகளுக்குப் பின்பும் தனிவாழ்வில் அந்த பெருந்தலைவனுக்கு மிஞ்சியது 60 ரூபாய்; பத்து கதர் வேட்டி சட்டை.

காமராஜர் கண் மூடினார். அவர் வாழ்ந்த வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக்கொண்டார். அவர் பயன்படுத்திய காரை கட்சி எடுத்துக்கொண்டது. அவரது உடலை நெருப்பு எடுத்துக்கொண்டது. அவரது பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது. என்றும் இந்த மண்ணில் நம் பெருந்தலைவர் வாழ்ந்த காலம்தான் தமிழர் வாழ்வில் ஒரு பொற்காலம்.

நாளை (ஜூலை 15-ந் தேதி) காமராஜர் பிறந்த தினம்.

தமிழருவிமணியன்,
தலைவர், காந்திய மக்கள் இயக்கம்.

Next Story