குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க கூட்டம் அலைமோதியது


குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 15 July 2018 3:00 AM IST (Updated: 14 July 2018 5:28 PM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிகளில் குளிக்க கூட்டம் அலைமோதியது.

தென்காசி, 

குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிகளில் குளிக்க கூட்டம் அலைமோதியது.

குற்றாலம் சீசன்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து சீசனை அனுபவித்து செல்வார்கள். இந்த ஆண்டு சீசன் மே மாதம் இறுதியில் தொடங்கியது.

குற்றாலத்தில் நேற்று சீசன் அருமையாக இருந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பு

நேற்று காலையில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. இந்த நிலையில் மெயின் அருவியில் காலை 11.15 மணிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. அப்போது அருவியில் சிறு சிறு கற்களும், மரக்கட்டைகளும் விழுந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மதியம் 1.30 மணிக்கு தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் அருவிக்கரையை பார்வையிட்டார். அப்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மொத்தமாக சுற்றுலா பயணிகளை அனுப்பாமல் 10 பேராக குளிக்க அனுமதி அளித்தார். அதன் பிறகு ஆண்கள் பகுதியிலும் பெண்கள் பகுதியிலும் சிறிது நேரத்திற்கு ஒரு முறை 10 பேராக குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஐந்தருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

இதேபோல் ஐந்தருவி அனைத்து கிளைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அங்கு குளிப்பதற்காக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். இதனால் அங்கும் 10 பேராக சென்று அருவியில் குளிக்க போலீசார் அனுமதித்தனர். ஐந்தருவி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் ஆங்காங்கே அவற்றை சீர் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் உள்ள ஒரு சில தங்கும் விடுதிகளை தவிர அனைத்து விடுதிகளும் நிரம்பிவிட்டன.

சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் வேண்டுகோள்

குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக போலீசார் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அருவிக்கரைகளில் சாதாரண உடையிலும், சீருடையிலும் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அருவிகளில் அதிக வெள்ளம் ஏற்படும் போது சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதிக்கின்றனர்.

வெள்ளப்பெருக்கு நேரங்களில் அருவிகளில் குளிக்கும் போது ஆபத்து ஏற்படும் என்பதால் தான் போலீசார் தடை விதிக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் சுற்றுலா பயணிகள் போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்கிறார்கள். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சிறப்பு காவல் படையினர் அருவிகளில் வெகுநேரம் நனைந்து கொண்டே கூட்டத்தை சீர் செய்து வருகிறார்கள். ஆனாலும் போலீசாரிடம் சுற்றுலா பயணிகள் தகராறு செய்வது வாடிக்கையாகவே உள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காகவே நாங்கள் செயல்படுகிறோம். எங்களுக்கு சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story