குந்தா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு பச்சை தேயிலை வினியோகிப்பதை விவசாயிகள் நிறுத்த முடிவு
மஞ்சூர் அருகே பச்சைதேயிலைக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்ததால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் முதற்கட்டமாக பச்சைதேயிலை வினியோகத்தை நாளை முதல் இரண்டு நாட்கள் நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளனர்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது எடக்காடு. இப்பகுதியில் தென்னிந்தியாவின் முதல் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையான குந்தா (எடக்காடு)கூட்டுறவு தேயிலை தொழிற் சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் எடக்காடு, முக்கிமலை, நடுஹட்டி, தலையட்டி, சூண்டட்டி, கவுண்டம்பாளையம், பாதகண்டி, காந்திகண்டி, காந்திகண்டி புதூர், தக்கர்பாபாநகர், சத்தியமூர்த்தி நகர் உட்பட 20–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தினசரி தங்களது தேயிலை தோட்டங்களில் இருந்து பறிக்கும் பச்சைதேயிலையை தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகிறார்கள். இவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பச்சை தேயிலைக்கு குன்னூர் இன்கோ சர்வ் மூலம் மாதந்தோறும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் குந்தா கூட்டுறவு தொழிற் சாலைக்கு விவசாய உறுப்பினர்கள் வினியோகித்த பச்சை தேயிலைக்கு மாத விலையாக கிலோ ஒன்றுக்கு 8 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மிகவும் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் விலையை உயர்த்தி வழங்க வேண்டி குன்னூரில் உள்ள இன்கோ சர்வ் அதிகாரியிடம் நேரில் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் விரக்தியடைந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று எடக்காடு நடுஹட்டி சமுதாய கூடத்தில் விவசாயிகள் சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எடக்காடு சிறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் பெள்ளிமுத்தன் தலைமை தாங்கினார். சிவபுத்தர், அட்டுபாயில் மாதாகவுடர், நடுஹட்டி பரமசிவன், சித்ரன், அட்டுபாயில் சந்திரன், சகாதேவன், ஜோகிகவுடர், கணபதி, சத்தியமூர்த்தி நகர் சித்ரன், ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விவசாய உறுப்பினர்களிடம் இருந்து கொள்முதல் செய்த பச்சை தேயிலைக்கு மிகவும் குறைவாக விலை நிர்ணயம் செய்த கூட்டுறவு தொழிற்சாலையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக விலை நிர்ணய அறிவிப்பை திரும்ப பெற்று பச்சைதேயிலைக்கு விலையை உயர்த்தி வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் கவன ஈர்ப்பாக முதற்கட்டமாக வருகிற நாளை முதல் 2 நாட்கள் குந்தா கூட்டுறவு தொழிற்சாலைக்கு பச்சை தேயிலை வினியோகிப்பதை நிறுத்துவது, அதன் பிறகும் கோரிக்கை நிறைவேற்றா விட்டால் அடுத்த கட்ட போராட்டங்களை நடத்துவது குறித்து முடிவெடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பாதகண்டி, முக்கிமலை, தக்கர்பாபாநகர், கவுண்டம் பாளையம் ஊர் தலைவர்கள், விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக முன்னாள் கவுன்சிலர் தருமராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் முன்னாள் கவுன்சிலர் கே.ஜெயக்குமார் நன்றி சுறினார்.