அவலாஞ்சி அணையின் நீர்மட்டம் கிடு, கிடு உயர்வு பாசனத்திற்கு திறந்து விட மின் வாரியம் முடிவு
மஞ்சூர் அருகே உள்ள அவலாஞ்சி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசனத்திற்கு திறந்து விட மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, எமரால்டு, அவலாஞ்சி, காட்டு குப்பை, சிங்கரா, மாயார், கெத்தை, பரளி, உள்ளிட்ட12 நீர்மின் நிலையங்கள் மூலம் தினசரி 834 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழையின் தாக்கத்தால் குறிப்பாக கோர குந்தா, கேரிங்டன், அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு அணைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் அவலாஞ்சி அணை 161 அடியை (மொத்த கொள்ளளவு 171 அடி) எட்டி உள்ளது. இன்னும் 10 அடிகள் நிரம்பினால் முழு கொள்ளளவை எட்டி அணை நிரம்பி வழியும். இங்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணையில் இருந்து தண்ணீர் அருகில் உள்ள எமரால்டு அணைக்கும் செல்கிறது. எமரால்டு அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் எமரால்டு அணையிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர் குந்தா அணையை வந்தடைகிறது. குந்தாவில் சேமிக்கப்படும் நீரை கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது குந்தா அணையில் நீர்மட்டம் 88.5 அடி (மொத்த கொள்ளவு 89 அடி) வரை உயர்ந்துள்ளது.
இங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கெத்தை அணைக்கு செல்கிறது. இதனால் கெத்தை அணை 155.5 அடியை (மொத்த கொள்ளளவு 156 அடி) எட்டி உள்ளது. அந்த அணையிலிருந்து தண்ணீர் ராட்சத குழாய் மூலம் திறக்கப்பட்டு பரளி மின் வாரியத்தை அடைகிறது. அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரானது பில்லூர் அணையை சென்றடைகிறது. அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்கு இனி சிக்கல் இருக்காது என்பதும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் அவலாஞ்சி அணையின் உபரி நீரை நேரடியாக மதகுகள் மூலம் பாசனத்திற்கு திறந்து விடவும் மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.