டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி பிரச்சினை: தமிழ்நாடு முழுவதும் 4½ லட்சம் லாரிகள் 20–ந் தேதி முதல் ஓடாது சம்மேளன தலைவர் பேட்டி


டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி பிரச்சினை: தமிழ்நாடு முழுவதும் 4½ லட்சம் லாரிகள் 20–ந் தேதி முதல் ஓடாது சம்மேளன தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 15 July 2018 3:30 AM IST (Updated: 14 July 2018 7:49 PM IST)
t-max-icont-min-icon

டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் லாரிகள் 20–ந் தேதி முதல் ஓடாது என்று சம்மேளன தலைவர் கூறினார்.

கோவை,

டீசல் விலை உயர்வு, சுங்ககட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க மண்டபத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தலைமை தாங்கினார்.

ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை ஆயில் நிறுவனங்களுக்கு வழங்கியதால் தாறுமாறாக விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசலையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வராமல் கலால் வரியை உயர்த்தி இருப்பதாலும் விலை உயருகிறது. மேலும் லாரிகளுக்கான இன்சூரன்சு கட்டணமும் 40 முதல் 50 சதவீதம்வரை உயர்ந்துள்ளது.

ஒரு லாரியின் மதிப்பு ரூ.1½ லட்சம் என்றால் இன்சூரன்சு பிரீமிய கட்டணம் மட்டும் ரூ.45 ஆயிரம் வரை செலுத்த வேண்டியதுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஒரு நாளைக்கு ரூ.52 கோடி வீதம் ரூ.18 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பீடாக மத்திய அரசு செலுத்தியது. இதே கட்டணத்தை நிர்ணயித்தால் நாங்கள் மொத்த தொகையையும் செலுத்த தயார். ஆனால் சுங்கச்சாவடிகளில் கட்டணம் மிகவும் உயர்ந்துள்ளது. லாரி உரிமையாளர்களை மிகவும் பாதித்துள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க கோரி லாரி உரிமையாளர்கள் அகில இந்திய அளவில் வருகிற 20–ந்தேதி முதல் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். அன்று காலை 6 மணிமுதல் லாரிகளை இயக்க மாட்டோம். இந்தியா முழுவதும் 75 லட்சம் லாரிகளும், தமிழ்நாட்டில் 4½ லட்சம் லாரிகளும், கோவை மாவட்டத் தில் 10 ஆயிரம் லாரிகளும் ஓடாது.

20–ந்தேதி அன்று அனைத்து வாகனங்களையும் இயக்காமல் பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். கியாஸ் டேங்கர், ஆயில் டேங்கர் லாரி உரிமையாளர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளனர். லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் தினமும் ரூ.300 முதல் ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மத்திய அரசு இதுவரை எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. டீசல் விலை, சுங்க கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் விலைவாசி உயர்வுக்கும் முக்கிய காரணமாக அமைவதால் பொதுமக்கள் எங்களது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story