தூத்துக்குடி கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 959 வழக்குகளுக்கு தீர்வு
தூத்துக்குடி கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 959 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 959 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான இளங்கோவன் தலைமை தாங்கி பேசினார்.
959 வழக்குகளுக்கு தீர்வு
இதில் காசோலை மோசடி வழக்கு, குடும்ப பிரச்சினை சார்ந்த வழக்கு, ஜீவனாம்ச வழக்குகள், சிவில் வழக்குகள், குற்ற வழக்கில் சமாதானம் செய்யக்கூடிய வழக்குகள், பணம் கொடுக்கல்–வாங்கல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் நஷ்டஈடு கோருதல் என நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 3 ஆயிரத்து 500 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 959 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.1 கோடியே 84 லட்சத்து 51 ஆயிரத்து 566 தீர்வு தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின், 2–வது கூடுதல் மாவட்ட நீதிபதி கவுதமன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பகவதிஅம்மாள், சார்பு நீதிபதி செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி சப்–கோர்ட்டில் நீதிபதி பாபுலால் தலைமையிலும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி நிஷாந்தினி தலைமையிலும், முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சங்கர் தலைமையிலும், 2–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு தாவூத் அம்மாள் தலைமையிலும், மக்கள் நீதிமன்றம் நடந்தது.
மொத்தம் 1,038 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 6 மோட்டார் வாகன வழக்குகள், 35 வங்கி வராக்கடன் வழக்குகள், 13 சிவில் வழக்குகள், 5 காசோலை மோசடி வழக்குகள் உள்பட 101 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story