பள்ளிகள் மூடப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு


பள்ளிகள் மூடப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 15 July 2018 4:15 AM IST (Updated: 14 July 2018 11:59 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர், மதுரை உள்பட 10 மாவட்டங்களில் உள்ள 10 பள்ளிக்கூடங்களுக்கு புதுமைப்பள்ளி விருதுகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராஜலட்சுமி ஆகியோர் வழங்கினர்.

விருதுநகர்,

விருதுநகரை அடுத்த ஆமத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மண்டல அளவில் கல்வி அலுவலர்களுக்கான பயிற்சி, கனவு ஆசிரியர் விருது மற்றும் புதுமைப்பள்ளி விருது வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன், விருதுநகர் கலெக்டர் சிவஞானம், ராதாகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 10 மாவட்டங்களை சேர்ந்த கல்வி அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மேலும் 35 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 10 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருதுகளையும் அவர்கள் வழங்கினர்.

முன்னதாக விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, தமிழக அரசு கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மாநிலத்தில் கல்வி புரட்சியை உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையில் 68 இடங்களாக இருந்த பொறுப்பு, தற்போது 120 இடங்களாக உயர்த்தப்பட்டு முதன்மைக்கல்வி அலுவலருக்கான அதிகாரம் இணை இயக்குனருக்கான அதிகாரத்தோடு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 9, 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு சீருடை, பிளஸ்–1, பிளஸ்–2 மாணவர்களுக்கு ஒரு சீருடை என மாற்றப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 5–ம் வகுப்பு வரையும், 6 முதல் 8–ம் வகுப்பு வரை 2 வித சீருடையாக மாற்றப்பட்டு அடுத்த ஆண்டு முதல் அரசு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் உருவாக்கி, 9–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை முற்றிலும் கணினி வழியே கற்றுத்தரப்படும் என்றார்.

பின்னர் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராஜலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேசுவரமுருகன், மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் கருப்பசாமி, வருவாய் அலுவலர் ஆனந்தகுமார், விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமிநாதன், கல்லூரி முதல்வர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:–

தமிழக அரசு இருமொழிக்கொள்கையை உறுதியாக கடைப்பிடிப்பதால் மத்திய அரசின் நவயோதையா பள்ளிகளுக்கு தடையாணை பெறப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் நவயோதையா பள்ளிகள் வர வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் தொடக்கப்பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் வெளியானது. ஆனால் பள்ளிகள் மூடப்படுவதை தடுக்க மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் மூடப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சத்துணவு மூட்டை பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும், முதல்–அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். பள்ளிகளில் ஆங்காங்கே பெற்றோர்–ஆசிரியர் கழகங்களின் செயல்பாடுகள் முறையாக இல்லை என்று வந்த தகவல் அடிப்படையில் பெற்றோர்–ஆசிரியர் கழகங்கள் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story