8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 6 பேர் கைதாகி விடுதலை


8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 6 பேர் கைதாகி விடுதலை
x
தினத்தந்தி 15 July 2018 3:30 AM IST (Updated: 15 July 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து போலீஸ் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின்னர் கைதானவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்காக காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலங்களை கையகப்படுத்த அளவீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஞ்சீபுரம் அருகே மாகரல் அடுத்த மணல்மேடு என்ற இடத்தில் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

அப்போது 8 வழிச்சாலை அமைப்பதை கண்டித்தும், அதற்காக நிலங்களை கையகப்படுத்த அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் திரண்டு வந்தனர்.

அப்போது காஞ்சீபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சங்க நிர்வாகிகளை ஒருமையில் திட்டி பேசியதாக கூறப்படுகிறது.

பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் நேரு(வயது 52), துளசிநாராயணன்(53), கோவிந்தன்(54), பாஸ்கரன்(46), மோகன்(60), சங்கர்(44) ஆகிய 6 பேரை கைது செய்து மாகரல் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

இதையடுத்து கைதான 6 பேரையும் விடுவிக்க கோரியும், விவசாய சங்க நிர்வாகிகளை ஒருமையில் பேசிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் விவசாயிகள் மாகரல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பஞ்சாட்சரம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தார். பின்னர் கைதான 6 பேரையும் மாலையில் விடுவித்தனர்.

விவசாய சங்க நிர்வாகிகளை ஒருமையில் பேசிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மீது மாகரல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story