புளியந்தோப்பில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்; 5 பேர் கைது


புளியந்தோப்பில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்; 5 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2018 3:45 AM IST (Updated: 15 July 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

புளியந்தோப்பில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திரு.வி.க நகர்,

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் 4-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ராஜா (வயது 25). இவருக்கும், வியாசர்பாடியை சேர்ந்த மணிமேகலை (23) என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது.

மணிமேகலை தனிக்குடித்தனம் செல்ல வேண்டி கணவர் ராஜாவை வற்புறுத்தி வந்ததாகவும், அதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் ராஜாவை பிரிந்து மணிமேகலை வியாசர்பாடியில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த ஒரு மாதமாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மணிமேகலை தனது கணவர் குடும்பத்தினர் மீது நேற்று முன்தினம் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து, சப்-இன்ஸ்பெக்டர் அம்பிகா விசாரணை நடத்தினார்.

அப்போது இரு தரப்பினரும் ஒருவரையொருவர் மாறிமாறி குற்றம் சாட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் அம்பிகா, அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது இருதரப்பினரும் சேர்ந்து அம்பிகாவை தரக்குறைவாக பேசி தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அம்பிகா அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இந்த தாக்குதல் குறித்து அம்பிகா, புளியந்தோப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து மணிமேகலையின் தந்தை ஏழுமலை (48), அண்ணன் ரஞ்சித் (24), அத்தை செல்லம்மா (47), ராஜா, பாட்டி பாளையம் (67) ஆகிய 5 பேரை கைது செய்தார். மேலும் தப்பி ஓடிய மணிமேகலையின் சித்தப்பா ராஜேந்திரனை (46) போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் வயதான பாளையம் போலீஸ் ஜாமீனில் விடப்பட்டார். மீதமுள்ள 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். பெண் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story