ஊட்டி–கூடலூர் சாலையில் பலத்த காற்றுக்கு மரம் முறிந்து விழுந்தது, போக்குவரத்து பாதிப்பு


ஊட்டி–கூடலூர் சாலையில் பலத்த காற்றுக்கு மரம் முறிந்து விழுந்தது, போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 July 2018 3:15 AM IST (Updated: 15 July 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி–கூடலூர் சாலையில் பலத்த காற்றுக்கு மரம் முறிந்து விழுந்தது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் உள்ள மண் எப்போதும் ஈரப்பதமாகவே காணப்படுகிறது. முக்கிய சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி–கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்காரா பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரம் ஒன்று வேருடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அந்த மரம் மின் ஒயர்கள் மீதும் விழுந்ததால், மின் ஒயர்கள் அறுந்ததோடு, ஒரு மின்கம்பம் கீழே சாய்ந்தது.

மரம் விழும் போது, அந்த வழியாக ஊட்டியை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த கார் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இந்த நிலையில் பைக்காரா பகுதியில் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ஊட்டியில் இருந்து கர்நாடகா மாநில பகுதிகளான மைசூர், பெங்களூர் செல்லும் அரசு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, மின்வாள், அரிவாள் கொண்டு மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பைக்காரா போலீசார் மற்றும் நடுவட்டம் பேரூராட்சி பணியாளர்கள் கீழே விழுந்த மரக்கிளைகளை சாலையில் இருந்து அகற்றினர். சிறிது நேர போராட்டத்துக்கு பின்னர் மரம் வெட்டி அகற்றப்பட்டது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. மரம் விழுந்ததில் அறுந்த மின் ஓயர்கள் மற்றும் சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி–கூடலூர் சாலையில் பலத்த காற்றுக்கு ஆங்காங்கே மரக்கிளைகள் விழுந்து வருகின்றன. இதனால் மரங்களுக்கு அடியில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பஸ்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

ஊட்டி–கூடலூர் சாலை ஊட்டி ஹில்பங்க் பகுதியில் நேற்று மாலை மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அந்த மரத்தின் வேர்பகுதி முழுவதும் அரித்து போய் இருந்ததால் விழுந்தது தெரியவந்தது. மேலும் அந்த மரம் மின் ஒயர்கள் மீது விழுந்ததால் மின்கம்பம் வளைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விழுந்த கிடந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.


Next Story