வாணாபுரம் பகுதியில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வரும் கரும்பு பயிர்கள் விவசாயிகள் கவலை


வாணாபுரம் பகுதியில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வரும் கரும்பு பயிர்கள் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 15 July 2018 4:45 AM IST (Updated: 15 July 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் இல்லாமல் கரும்பு பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வாணாபுரம்,

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியான மழுவம்பட்டு, வாழவச்சனூர், குங்கிலியநத்தம், கொட்டையூர், தென்கரும்பலூர், தானிப்பாடி, தண்டராம்பட்டு, இளையாங்கன்னி உள்ளிட்ட பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகின்றது.

இந்த பகுதிகளில் நெல், கேழ்வரகு, மக்காச்சோளம், எள், கம்பு, மணிலா உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயிரிடப்பட்டு பராமரித்து வருகின்றனர்.


இந்த நிலையில் கரும்பு பயிரை விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்டு அதனை பராமரித்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் குறைந்து வருவதால் பயிருக்கு தண்ணீர் குறைந்த அளவே செல்கிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு கரும்பு பயிர்கள் காய்ந்து வருகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. அதனால் ஏரிகள், குளங்கள், ஓடைகள் என அனைத்து பகுதியிலும் தண்ணீர் நிரம்பி இருந்தது. இதனால் கிணற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. அதை வைத்து நெல், மணிலா போன்றவற்றை பயிரிட்டு அறுவடை செய்து உள்ளோம். தற்போது கரும்பு பயிரிடப்பட்ட நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கரும்பு பயிர்கள் காய்ந்து வருகிறது. வாடிய பயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் மழை பெய்தால் நன்றாக இருக்கும் என்றனர்.

Next Story