தண்டாயுதபாணி சிலை, சூலம் மாயம்: கோவில் மூத்த குருக்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை


தண்டாயுதபாணி சிலை, சூலம் மாயம்: கோவில் மூத்த குருக்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 July 2018 4:30 AM IST (Updated: 15 July 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

அருணாசலேஸ்வரர் கோவிலில் தண்டாயுதபாணி சிலை, சூலம் மாயமானது தொடர்பாக கோவில் மூத்த குருக்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஐம்பொன் சாமி சிலைகள், வெண்கல சிலைகள், பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இது கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த கோவிலில் இணை ஆணையராக ஞானசேகரன் பொறுப்பேற்ற பிறகு கோவிலில் உள்ள சிலைகள், ஆபரணங்கள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் முன்னிலையில் கணக்கிடும் பணியில் ஈடுபட்டார். அப்போது தண்டாயுதபாணி சிலையும், சூலமும் மாயமானது தெரியவந்தது.

1954-ம் ஆண்டு உள்ள பதிவேட்டில் இந்த சிலை மற்றும் சூலம் தொடர்பான விவரங்கள் உள்ளது. இந்த சிலையும், சூலமும் கடந்த 1959-ம் ஆண்டு ஒரு துறைக்கு வழங்கப்பட்டு உள்ளதாக பதிவேட்டில் மை பேனா மூலம் எழுதப்பட்டு உள்ளது. பல ஆண்டுகள் ஆனதால் அந்த பதிவேட்டில் குறிப்பிட்டுள்ள துறையின் பெயர் சரியாக தெரியவில்லை.

எந்த துறையில் இந்த சிலையும், சூலமும் கொடுக்கப்பட்டு உள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் கடந்த 10-ந் தேதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.


இந்த நிலையில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கோவில் இணை ஆணையர் ஞானசேகரனிடம் தேவையான விவரங்களை கேட்டறிந்தனர்.

மேலும் இந்த சமயத்தில் கோவிலில் பணியாற்றியவர்கள் யாரேனும் உள்ளனரா? என்றும் விவரங்களை கேட்டறிந்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் கோவிலில் பணியாற்றிய மூத்த குருக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிலையும், சூலமும் எந்த துறைக்கு வழங்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story