கோவில் குளத்தை சுற்றிலும் சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


கோவில் குளத்தை சுற்றிலும் சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 July 2018 3:45 AM IST (Updated: 15 July 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கோவில் குளத்தை சுற்றிலும் சுவர் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே சூளமேனி கிராம எல்லையில் மிகவும் பழமை வாய்ந்த ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெறும்போது பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இவ்வாறு வரும் பக்தர்கள் குளிப்பதற்காகவும், கோவிலில் உள்ள சாமி விக்கிரகங்களை தண்ணீரால் சுத்தம் செய்வதற்காகவும் கோவிலை ஒட்டி சுமார் 1 ஏக்கர் நிலப்பரப்பில் 100 வருடங்களுக்கு முன்பு குளம் அமைக்கப்பட்டது.

கோடை வெயில் காரணமாக தற்போது குளம் வறண்டு காணப்படுகிறது. குளத்தின் உள்ளே ஓடைபோல் சிறிதளவு தண்ணீரே உள்ளது.

சுமார் 25 அடி ஆழம் கொண்ட இந்த குளம் ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் பிரதான சாலையை ஒட்டி உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

குளத்தை சுற்றிலும் சுவர் கிடையாது. சாலையை விட்டு கீழே இறங்கினாலே குளத்துக்குள்தான் தவறி விழவேண்டும். இதனால் ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் சாலையில் நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

குளத்தில் தண்ணீர் இருக்கும்போது, கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடு, மாடுகள் எதிர்பாராதவிதமாக குளத்துக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி சாகும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடந்த வருடம் விவசாய தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு இந்த வழியாக சென்ற டிராக்டர் ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள இந்த குளத்துக்குள் பாய்ந்தது. இதில் பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது போன்ற விபத்துகள் மேலும் நடைபெறாமல் தடுக்க கோவில் குளத்தை சுற்றிலும் சுவர் கட்ட வேண்டும் என்று ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம், கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகம் மற்றும் முதல்-அமைச்சரின் தனி பிரிவுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.

விபத்துகள், உயிர் பலிகள் ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த கோவில் குளத்தை சுற்றிலும் சுவர் அமைக்க வேண்டும் என அந்த கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story