கடற்கரை சாலையில் வான வேடிக்கை: பிரெஞ்சு தேசிய தினம் கொண்டாட்டம்


கடற்கரை சாலையில் வான வேடிக்கை: பிரெஞ்சு தேசிய தினம் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 15 July 2018 4:15 AM IST (Updated: 15 July 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் 229–ம் ஆண்டு பிரெஞ்சு தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் 229–ம் ஆண்டு பிரெஞ்சு தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போர் நினைவுத் தூணில் பிரெஞ்சு தூதரக அதிகாரி கேத்ரின் ஸ்வார்டு, மாவட்ட கலெக்டர் சவுத்ரி அபிஜித் விஜய் ஆகியோர் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பிரெஞ்சு தூதரக அதிகாரிகள், புதுவை அரசு அதிகாரிகள், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரக அலுவலகத்தில் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பிரெஞ்சு தூதரக அலுவலகம் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன. விழாவில் பிரெஞ்சு தூதரக அதிகாரி கேத்ரின் ஸ்வார்டு வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் கிரண்பெடி, முதல்–அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் கலந்துகொண்டனர். பிரெஞ்சு குடியரசு தின விழாவையொட்டி கடற்கரை சாலையில் வான வேடிக்கை நடந்தது. இதனை கடற்கரைக்கு வந்திருந்த ஏராளமான உள்ளூர் வாசிகள், சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.


Next Story