துணை மின் நிலையங்கள்அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் - அசோக்குமார் எம்.பி. அறிவுரை


துணை மின் நிலையங்கள்அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் - அசோக்குமார் எம்.பி. அறிவுரை
x
தினத்தந்தி 15 July 2018 5:00 AM IST (Updated: 15 July 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அசோக்குமார் எம்.பி., அறிவுரை வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு குழு தலைவரும், எம்.பி.யுமான அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கதிரவன், பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தின் போது, மாவட்ட மின்சார குழு சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், முடிக்கப்பட்ட பணிகள், மின் இணைப்புகள் வழங்கப்பட்டதின் விவரம், மத்திய, மாநில அரசின் தீன்தயாள் உபாத்யாயா, கிராம ஜோதி யோஜனா திட்டம், ஒருங்கிணைந்த மின் மேம்பாடு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மின் பகிர்மான கோட்டங்களான ஓசூர், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, குருபரப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களின் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும். அடுத்த கூட்டத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் வகையில் பணிகள் முடித்திருக்க வேண்டும்.

மத்திய அரசின் உதய் திட்டத்தின் பகுதி 1 மற்றும் 2 புதியதாக நிறுவப்பட்டுள்ள துணை மின் நிலையங்களின் தற்போதைய நிலை தன்மையை உறுதி செய்து, மின் மாற்றி பணிகளை மேம்படுத்த வேண்டும். அடுத்த கூட்டத்தில் பணியின் முன்னேற்றத்தை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால் மற்றும் உதவி இயக்குனர்கள், பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story