திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் பொதுமக்கள் மனு


திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 15 July 2018 4:30 AM IST (Updated: 15 July 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டில் வடிகால் அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட சிறுபூலுவப்பட்டி, அம்மன்நகர், கிருஷ்ணாநகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த தங்கராஜ், தி.மு.க.வை சேர்ந்த ராம்குமார், தே.மு.தி.க.வை சேர்ந்த செல்வகுமார் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் திருப்பூர் வடக்கு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள், கோட்ட பொறியாளர் செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட அம்மன்நகர், பாலாஜிநகர், கிருஷ்ணாநகர், சிறுபூலுவப்பட்டி மற்றும் கீதாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் இருந்து வெளியாகும் கழிவுநீர் மற்றும் மழைநீர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற வசதியாக 2014-ம் ஆண்டு ரங்கநாதபுரம் முதல் அம்மன்நகர் வரையிலான சிறுபூலுவப்பட்டி ரிங்ரோட்டில் பிரதான மழைநீர் வடிகால் அமைக்க மதிப்பிடப்பட்டது.


இதன் பின்னர் இந்த பணி எஸ்.பி.நகர் முதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வரை 300 மீட்டர் தூரமும், அம்மன்நகரில் 100 மீட்டர் தூரமும் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக முடிக்காமல் இருந்து வருகிறது. மாநகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டிருப்பதால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லாமல் இருக்கிறது.

இந்த பணிகளை மேற்கொள்ளாததால் மழைநீர் மற்றும் கழிவுநீர் குடியிருப்புகளிலேயே தேங்கி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டையும், நோய் தொற்றையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை விரைந்து சாலையை அளவீடு செய்து மாநகராட்சிக்கு பணி மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். விரைவாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Next Story