செல்போன் மாயமானதால் வாலிபர் வாக்குவாதம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட ஆம்னி பஸ்


செல்போன் மாயமானதால் வாலிபர் வாக்குவாதம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட ஆம்னி பஸ்
x
தினத்தந்தி 15 July 2018 3:45 AM IST (Updated: 15 July 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் மாயமானதால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் ஆம்னி பஸ்சை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல வைத்தார்.

பெருந்துறை.

சென்னையை சேர்ந்தவர் சிபி (வயது 27). இவர் சினிமா துறையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சிபி சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ்சில் கோவை வந்து கொண்டிருந்தார். படுக்கை வசதி கொண்ட அந்த பஸ்சில் தன்னுடைய விலை உயர்ந்த செல்போனை அருகில் வைத்து விட்டு சிபி தூங்கிவிட்டார். நேற்று காலை 6 மணிஅளவில் திடீரென விழித்து பார்த்தபோது செல்போனை காணவில்லை. அப்போது பஸ் ஈரோடு மாவட்டம் பவானியை கடந்து சென்று கொண்டிருந்தது.


இதைத்தொடர்ந்து சிபி டிரைவரிடம் தன்னுடைய செல்போன் மாயமானது பற்றி கூறினார். இதற்கிடையே கோவைக்கு டிக்கெட் எடுத்து விட்டு பவானியில் 2 பயணிகள் இறங்கி விட்டது தெரிய வந்தது.

ஆனால் அவர்கள் யார்? என்று தெரியவில்லை. பஸ் பெருந்துறை டோல்கேட் வந்தபோது சிபி பஸ்சை பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

வேறு வழியில்லாமல் டிரைவர் பஸ்சை பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்சென்றார். ஆனால் போலீசார் சம்பவம் நடந்தது பவானி பகுதி என்பதால் சிபியின் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். மேலும் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறினார்கள்.

இந்தநிலையில் பல மணி நேரம் பஸ்சில் தவித்த பயணிகள் பொறுமையிழந்து சிபியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

இதனால் வேறு வழியில்லாமல் பயணிகளின் பைகளை சிபியே சோதனை செய்தார். ஆனால் செல்போன் கிடைக்கவில்லை. பின்னர் அந்த ஆம்னி பஸ் அங்கிருந்து மதியம் 1.30 மணி அளவில் புறப்பட்டு கோவை சென்றது.


ஆம்னி பஸ்களில் முன் பதிவு செய்தவர்களின் அடையாள அட்டை, செல்போன் எண்கள் நிர்வாகத்திடம் இருக்கும். ஆனால் இந்த பஸ்சில் பயணிகளிடம் கட்டணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு பயணசீட்டு கொடுத்துள்ளனர். அதில் இருக்கை எண் மட்டும் இருந்தது. பெயர் முகவரி, செல்போன் எண் என எதுவும் இல்லை. அதனால் காணாமல்போன செல்போனையும் யார் எடுத்தது? என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்தனர்.

Next Story