அடுத்த மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அமல்


அடுத்த மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அமல்
x
தினத்தந்தி 15 July 2018 6:00 AM IST (Updated: 15 July 2018 6:00 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநில மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கத்தின் ஆண்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

மாநிலத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் இலவச பால் மற்றும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் (ஆகஸ்டு) இந்த திட்டம் அமலுக்கு வரும். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதியில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. அவ்வாறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்ததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளிடம் காணப்படும் விளையாட்டு திறமையை ஊக்குவிக்க, மங்களூருவில் உலகளவில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்த அரசு ஆலோசித்து வருகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளை பார்க்கும் போது நான் மனதளவில் உடைந்து போய் விடுவேன். அந்த குழந்தைகளின் மேம்பாட்டுக்காக சிறப்பு திட்டத்தை வகுத்து செயல்படுத்த முடிவு எடுத்துள்ளேன்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்க 20 ஏக்கரில் பிசியோதெரபி மையம் அமைக்க கட்டிடம் கட்டுவதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் பொறுமையை இழக்கக்கூடாது. ஆசிரியர்கள் சகிப்பு தன்மையை இழந்து பொறுமை காக்க தவறினால், அது குழந்தைகளின் நலனை வெகுவாக பாதிக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். மாநில வளர்ச்சிக்காக தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். விவசாயிகள் கடன் ரூ.35 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.40 ஆயிரம் கோடி வரை தள்ளுபடி செய்துள்ளேன். அதுபற்றி யாரும் பேசுவதில்லை.

பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை மட்டுமே பெரிதுபடுத்துகிறார்கள். வரி உயர்வால் மாநில மக்கள் கஷ்டத்தை அனுபவித்து வருவதாக தினமும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. அதே நேரத்தில் மத்திய அரசு கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு எந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது என்று நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். அதுபற்றி யாரும் பேசுவதில்லை. கர்நாடக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒரு ரூபாய் உயர்த்தி இருப்பதற்கும், மின் கட்டணம் மாதம் ரூ.10 உயர்த்தி உள்ளதை பெரிதுபடுத்துகிறார்கள்.

நான் ஒரு சாதிக்கு மட்டுமோ, பெங்களூருவுக்கு மட்டுமோ முதல்-மந்திரி அல்ல. நான் 6½ கோடி மக்களின் முதல்-மந்திரி. 30 மாவட்டத்திற்கு நான் முதல்-மந்திரி ஆவேன். என் மீது பத்திரிகையாளர்களுக்கு உள்ள கோபம் என்ன? என்பது தெரியவில்லை. மாநில மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி நடக்கிறது. ஒரு சிறுவன் குடகு மாவட்டத்திற்கு அநியாயம் ஏற்பட்டு இருப்பதாக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு சொல்லி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதை பார்த்தேன்.

70 ஆண்டுகள் உள்ள பிரச்சினைகளை 2 மாதங்களில் தீர்க்க சாத்தியமா?. நான் 2 நாட்கள் குடகு மாவட்டத்தில் தங்கி இருந்து அந்த மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க தயாராக உள்ளேன். எனது குறிக்கோள் மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது தான். அதற்கு கால அவகாசங்கள் கொடுங்கள். நான் முதல்-மந்திரியாகி 2 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் அரசு மீது குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல.

இவ்வாறு குமாரசாமி பேசினார். 

Next Story