உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 15 July 2018 11:51 AM IST (Updated: 15 July 2018 11:51 AM IST)
t-max-icont-min-icon

அவள் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவள். அழகான ேதாற்றம் கொண்டவள். ஆசிரியை பயிற்சி பள்ளி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தாள்.

வள் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவள். அழகான ேதாற்றம் கொண்டவள். ஆசிரியை பயிற்சி பள்ளி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தாள். தேர்ச்சி பெற்று, ஆசிரியைப் பணி கிடைத்த பின்பு திருமணம் செய்துகொண்டால் போதும் என்று நினைத்தாள். ஏன்என்றால் பெற்றோரின் நடுத்தர வயதில்தான் அவள் பிறந்தாள். அதனால் அவளது இளம் பருவத்திலேயே அவர்கள் முதுமையடைந்துவிட்டார்கள். அவர்களை பாதுகாத்து, பராமரிக்க வேண்டிய பொறுப்பும் அவளுக்கு இருந்ததால், படிப்பு முடிந்ததும் பணியில் சேர்ந்து வருவாய் ஈட்டவேண்டிய கட்டாயத்தில் அவள் இருந்தாள்.

இந்த நிலையில், சற்று தூரத்தில் உள்ள பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர், மும்பையில் வேலை பார்க்கும் தனது மகனுக்கு அவளை பெண் கேட்டு வந்தார். அவள், தற்போது திருமணத்தில் ஆர்வம் இல்லை என்று கூறிய பின்பும், அந்த பெண்மணி ‘நீ அழகாக இருப்பதால், உன்னை என் மருமகளாக்க ரொம்பவும் ஆசைப்படுகிறேன். உங்களிடமிருந்து நான் நகை, பணம் எதையும் எதிர்பார்க்கவில்லை. நாங்களே எல்லா செலவு களையும் செய்து சீரும் சிறப்புமாக திரு மணத்தை நடத்திவிடுவோம்’ என்றார்.

அதற்கு அவள் மறுத்தாலும், அவளது ெபற்றோரிடம் தொடர்ந்து பேசி அந்த பெண்மணி சம்மதம் பெற்றுவிட்டாள். சொன்னபடியே எல்லா செலவுகளையும் செய்தாள். திரு மணம் நடந்தது. அவள் ஒரு வருடம் தாய் வீட்டிலே தங்கியிருந்து படிப்பை நிறைவு செய்ய விரும்புவதாக தனது கணவரிடம் சொன்னாள். அதற்கு அவர் சம்மதிக்காததால், படிப்பை இடையிலே நிறுத்திவிட்டு, கணவரோடு மும்பைக்கு போய்விட்டாள்.

அவர் அங்கே தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தார். அலுவலகத்தின் சார்பில் அவருக்கு இரண்டு படுக்கை அறைகளை கொண்ட வீடு ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் தாம்பத்ய வாழ்க்கை நல்லபடியாகவே போய்க்கொண்டிருந்தது. கர்ப்பிணியானாள்.

ஒருநாள் அவள், கணவரோடு ஷாப்பிங் சென்றிருந்தாள். அங்கே எதேச்சையாக சந்தித்த ஒரு பெண்ணை, தனது ஊரைச் சேர்ந்தவள் என்றும்- தனது தூரத்து சொந்தம் என்றும், கணவர் அவளுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அந்த பெண், கர்ப்பிணியான இவளிடம் நன்றாக பேசி நலம் விசாரித்துவிட்டு, போன் நம்பரையும் வாங்கிவிட்டு சென்றாள்.

அடுத்த சில வாரங்களில் அவள் பிரசவத்திற்காக தாய் வீடு வந்தாள். குழந்தை பிறந்தது. இரண்டு மாதங்கள் கடந்ததும் குழந்தையோடு அவள் கணவர் வீட்டிற்கு போக தயாரானபோது மாமியார், ‘அங்கு நீ தனி ஆளாக குழந்தையை பராமரிக்க சிரமப்படுவாய். அதனால் இங்கிருந்து நடுத்தர வயது வேலைக்கார பெண் ஒருத்தியை உன்னோடு அனுப்பிவைக்கிறேன்’ என்றாள்.. அவளுக்கும் அது சரியாகப்படவே, வேலைக்கார பெண்ணையும் தன்னோடு அழைத்துச் சென்றாள்.

இவள் குழந்தையோடு வீட்டிற்கு சென்றபோது, அங்கே இ்ன்னொரு நடுத்தர வயது பெண் தங்கியிருந்தாள். அந்த பெண் யாரென்று இவள் கணவரிடம் விசாரித்தாள். ‘அவள் வேறு மாநிலத்தில் இருந்து, அலுவலகத்திற்கு புதிதாக வேலைக்கு வந்திருக்கிறாள். அவளுக்காக அலுவலகத்தில் இருந்து புதிய வீடு தேடிக்கொண்டிருக்கிறார்கள். வீடு கிடைத்ததும் போய்விடுவாள். உயர் அதிகாரி உத்தரவு என்பதாலும், இந்த வீடு அலுவலகத்திற்கு சொந்தமானது என்பதாலும், அவளை இங்கே தங்கவைக்க நான் சம்மதிக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது’ என்றார். அந்த பெண், இவளுக்கு புரியாத மொழியில் பேசினாள். ஒரு படுக்கை அறையை பயன்படுத்திக்கொண்டாள்.

கணவனும்- அந்த பெண்ணும் வீட்டில் அவ்வளவு நெருக்கமாக பழகிக்கொள்ளாவிட்டாலும், அவர்கள் இருவருக்குள்ளும் தவறான உறவு இருக்கிறது என்பதை இவளால் யூகிக்கமுடிந்தது. ஒரு சில வாரங்களில் அவள் புதிய வீடு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி வெளியேறிச் சென்றுவிட்டாள்.

அடுத்த ஒரு மாதத்தில், வீட்டு வேலைக்காக ஊரில் இருந்து வந்த பெண் திடீரென்று தன்னை ஊருக்கு ரெயில் ஏற்றிவிடும்படி கூறினாள். என்ன காரணம் என்று கேட்டபோது அவள் எதுவும் சொல்லவில்லை. அழுைகயை மட்டும் பதிலாக்கிவிட்டு சொந்த ஊருக்கு போய்விட்டாள்.

தன்னை சுற்றி என்ன நடக்கிறது? தனது கணவர் நல்லவரா? கெட்டவரா? என்று அவளால் தெரிந்்துகொள்ள முடியவில்லை. குழம்பிக் கொண்டிருந்தாள். இந்த சூழ்நிலையில் கணவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு உடல் எடை குறைந்துகொண்டே இருந்தது.

அப்போது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு ஷாப்பிங் சென்றபோது, கணவரின் உறவுப் பெண் என்று அறிமுகமானவள் இவளோடு போனில் தொடர்புகொண்டாள். அவள், ‘உன்னை பார்த்தால் பாவமாக இருக்கிறது. அதனால் உன் கணவரை பற்றிய சில உண்மைகளை சொல்கிறேன். அவர் கல்லூரியில் படிக்கும் காலத்திலே தன்னைவிட பத்து, பதினைந்து வயது அதிகமான பெண்களோடு தொடர்பு வைத்திருந்தார். அந்த தொடர்புகள் வெளியே தெரிந்து அசிங்கமாகிவிட்டதால்தான் ஊரில் இருந்து வெளியேறி மும்பை சென்றார். அவருக்கு எப்போதுமே நடுத்தர வயது பெண்களோடு ஈர்ப்பு அதிகமுண்டு. நீ ஜாக்கிரதையாக இருந்து அவரை கவனித்துக்கொள். ஏமாந்து போய்விடாதே!’ என்றாள்.

அதை கேட்டு இவள் அதிர்ச்சியடைந் திருந்த நிலையில், ஊருக்கு சென்றிருந்த வேலைக்கார பெண் போனில் ெதாடர்புகொண்டாள். ‘உன் கணவர் சரியில்லாத ஆளு தாயி..! அவன் தொந்தரவு தாங்க முடியாமல்தான் நான் வேலையை விட்டுட்டு உடனடியாக ஊருக்கு திரும்பினேன்..’ என்றாள்.

இரண்டு பெண்களும் சொன்ன தகவல் அவளை பல விதங்களில் யூகிக்க வைக்க, நோய்வாய்ப்பட்டிருந்த கணவரை எச்.ஐ.வி. டெஸ்ட் எடுக்கவைத்தாள். அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பயத்துடன் தனக்கும் டெஸ்ட் எடுத்தாள். பாவம் அவளும் பாதிக்கப்பட்டிருக்கிறாள்!

- உஷாரு வரும்.

Next Story