வாழ்க்கையில் வெல்ல வழிகாட்டும் நடனம்


வாழ்க்கையில் வெல்ல வழிகாட்டும் நடனம்
x
தினத்தந்தி 15 July 2018 11:58 AM IST (Updated: 15 July 2018 11:58 AM IST)
t-max-icont-min-icon

உடலையும், உள்ளத்தையும் உற்சாகப்படுத்துவது நடனக் கலை. இது நல்ல உடற்பயிற்சியாகவும் விளங்குகிறது.

டலையும், உள்ளத்தையும் உற்சாகப்படுத்துவது நடனக் கலை. இது நல்ல உடற்பயிற்சியாகவும் விளங்குகிறது. நடனம் கற்றுக்கொள்வது இன்று பலதரப்பட்ட பருவத்தினருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. ஏன்என்றால் அது மனதை மகிழ்விப்பதோடு, வருமானத்திற்கும் வழிவகை செய்கிறது. முறைப்படி நாட்டியம் கற்றுக்கொண்டவர்கள், பயிற்சி மையத்தை உருவாக்கி பணம் சம்பாதிக்கிறார்கள். பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாட்டியம் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. சினிமா வாய்ப்பு தேடுபவர்கள், நடிப்பவர்களுக்கு நாட்டியம் கற்றுக்கொடுக்கவும் நடன அமைப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். நிகழ்ச்சிகளில் நடனமாடுபவர்களுக்கு பயிற்சி வழங்கவும் நாட்டிய கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களாலும் நன்றாக சம்பாதிக்க முடிகிறது.

நடன அமைப்பாளரான சேவியோ அதுபற்றி விவரிக்கிறார்.

‘‘எனக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது அலாதி பிரியம் இருந்தது. நடிகர் கோவிந்தா, நடிகை மாதுரி தீட்ஷித் ஆகியோர் நடனம் மிகவும் பிடிக்கும். நடிகர் ரித்திக்ரோஷனைப் போன்று வேகமான ‘ஸ்டெப்’களை போட்டு பழகுவேன். நான் சுயமாகவே நடனத்தை கற்றுக்கொண்டு, பள்ளி- கல்லூரி நிகழ்ச்சிகளில் நடனமாடினேன். எல்லோரும் ரசித்தார்கள். அது எனக்கு உற்சாகமூட்டியது. பிறகுதான் முறைப்படி நடனம் கற்றேன். இன்று நடன அமைப்பாளராகிவிட்டேன்.

நடன இயக்குனர்கள், மற்ற நடனங்களை பார்த்து கிரகித்து புதிய ஸ்டெப்களை உருவாக்க வேண்டும். அந்த ஸ்டெப்களை தான் வடிவமைத்து, கற்று மற்றவர் களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இசைக்கேற்ப அதனை வேகப்படுத்தும்போது அழகான நடனக்காட்சி உருவாகிவிடும். நடனம் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஆடுபவர்களுக்கும் உத்வேகம் தரும். இன்று இளைஞர்களால் நடனம் விரும்பப்படுவதற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே காரணமாக இருக்கிறது. அதில் பங்கேற்க பலரும் விரும்புகிறார்கள். அதனால் நாட்டியம் வருமானம் தரும் கலையாகவும் ஆகிவிட்டது” என்கிறார்.

நடிகை மாதுரி தீட்ஷித் நாட்டிய பிரியர். அவர் பிரபலமான ெதாலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்கிறார். அவரது கருத்து:

‘‘நான் நடுவராக பங்கேற்கும் நாட்டிய நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு முறையும் புதிய திறமைசாலிகளை சந்திக்கிறேன். அவர்களது நடன அசைவுகள் ஒவ்வொன்றும் ஆச்சரியம் தருகிறது. சினிமாவில் கூட இப்படிப்பட்ட நாட்டியங்களை நான் பார்த்ததில்லை. இதில் பங்குகொள்ளும் அனைவரும் கடுமையாக போட்டியிடுகிறார்கள். போட்டியில் தோல்வி அடைந்தவர்கள் சோர்ந்துபோய் பின்வாங்குவதில்லை. நன்றாக பயிற்சி பெற்று மீண்டும் போட்டியில் பங்கேற்று பரிசு பெறுகிறார்கள். இந்த மன வலிமையை நாட்டியம் அவர் களுக்கு கொடுத்திருக்கிறது. இது பாராட்டக்கூடிய விஷயம். இதே ஊக்கமும், முயற்சியும் மற்ற விஷயங்களில் தொடரும்போது அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி’’ என்கிறார்.

Next Story