எந்திர சமையல்காரர் வந்துவிட்டார்.. விரும்பிய உணவை சமைத்துத் தருகிறார்!


எந்திர சமையல்காரர் வந்துவிட்டார்.. விரும்பிய உணவை சமைத்துத் தருகிறார்!
x
தினத்தந்தி 15 July 2018 12:35 PM IST (Updated: 15 July 2018 12:35 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மில்லர்ஸ் ரோட்டுக்குச் செல்பவர்களுக்கு அங்கு ஒரு மெஷின் கையால் சாப்பிடும் வாய்ப்புக் கிடைக்கும். ஆமாம், அங்கு ஒரு மெஷின், சமையல்காரர்போல் சமர்த்தாக விரும்பிய உணவுகளை சமைத்து தருகிறது.

பெங்களூரு மில்லர்ஸ் ரோட்டுக்குச் செல்பவர்களுக்கு அங்கு ஒரு மெஷின் கையால் சாப்பிடும் வாய்ப்புக் கிடைக்கும். ஆமாம், அங்கு ஒரு மெஷின், சமையல்காரர்போல் சமர்த்தாக விரும்பிய உணவுகளை சமைத்து தருகிறது.

அந்த மெஷினுக்குள், நாம் விரும்பும் சமையலுக்குத் தேவையான மூலப் பொருட்களை இட்டு, அதை எவ்வளவு ருசியாக சமைத்து தரவேண்டும் என்று லேப்டாப் மூலம் உத்தரவிட்டால் போதும், குறிப்பிட்ட நேரத்தில் சுடச்சுட உணவு தயாராகிவிடும்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிய கோகன் சுஜய் கார்லோஸும், ஏரோஸ்பேஸ் என்ஜினீயரான அர்பித் சர்மாவும் இணைந்து இந்த எந்திர சமையல்காரரை உருவாக்கியிருக்கிறார்கள்.

பல்லாண்டு கால உழைப்பு, நூற்றுக்கணக்கான கணக்கீடுகள், ஆராய்ச்சிக்காக பல லட்ச ரூபாய் செலவுக்குப் பின் இந்த உணவு தயாரிக்கும் எந்திரம் உருவாகியிருக்கிறது.

இப்போதைக்கு உப்புமா, பிசிபேளா பாத், தக்காளி ரசம், சோலே மசாலா, மட்டர் பனீர், தால் தட்கா போன்றவைகளை இந்த சமையல் மெஷின் தயாரித்து தருகிறது. அதாவது, திறந்தநிலையில் அவித்தல், வறுத்தல் முறையிலான உணவுகளை இதனால் தயாரிக்க முடியும். எண்ணெய்யில் பொரித்தல், பிரெஷர் குக்கிங் முறையெல்லாம் முடியாது. எனவே, இப்போதைக்கு இந்த எந்திர சமையல்காரர் இட்லி, பக்கோடா போன்றவற்றைத் தயாரிக்க மாட்டார், சப்பாத்தியும், மசால் தோசையும் சுட்டுத் தரமாட்டார்.

ஆனால், ‘‘அடுத்த ஆண்டு எங்கள் மெஷின் முழுமையாகத் தயாரானதும், அது 150 இந்திய உணவுகளைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்குத் தரும்’’ என்று தெம்பாகக் கூறுகிறார், சர்மா.

ஒரு ‘புனல்’ மூலம், இந்த எந்திரத்தின் பெரிய மூடிய பாத்திரம் போன்ற அமைப்பில் உள்ள துவாரங்கள் வழியாக காய்கறிகள், எண்ணெய், மசாலாப் பொருட்கள், தண்ணீர் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவுகளில் சர்மா இடுகிறார். அடுத்த 40 நிமிடங்களில் நாம் விரும்பிய உணவு தயாராகிவிடுகிறது.

இந்த வடிவமைப்பாளர்கள் இருவரும், தானியங்கி சமையல் எந்திரங்களை தயாரிக்கும் முயற்சியில் வெளிநாடுகளில் சில வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள். கடந்த மே மாதத்தில், அமெரிக்காவின் பாஸ்டனில் சில எம்.ஐ.டி. மாணவர்கள் இணைந்து முழுக்க முழுக்கத் தானியங்கி முறையில் செயல்படும் ஒரு துரித உணவகத்தைத் திறந்திருக்கிறார்கள். அங்கு, பொரித்த உணவுகளை தயாரித்து வழங்கும் ஒரு சீன ரோபோ இருக்கிறது. அது சில குறிப்பிட்ட உணவுகளைத் தயாரித்து வழங்கும். அடுப்பங்கரை வேலை முடிந்த பின்பு எல்லாவற்றையும் கழுவி சுத்தம் செய்யும். அதுபோல் ‘மோலி’ என்ற ரோபோ இங்கிலாந்தில் செயல்பாட்டில் இருக்கிறது. இதே பெங்களூருவில், பானையில் உணவு சமைக்கும் ‘ஜூலியா’ என்ற ரோபோவையும் வேறு இரண்டு என்ஜினீயர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் அவைகளில் இருந்து மாறுபட்டு கொஞ்சம் கஷ்டமான உணவு வகைகளையும் சமைக்கக்கூடியது என்பதுதான் இந்த புதிய எந்திரத்தின் சிறப்பு.

‘‘மற்ற நாட்டு உணவு வகைகளைப் போல இல்லாமல் நம் நாட்டு உணவுகளைச் சமைப்பது கொஞ்சம் சிக்கலானது. காரணம் நாம் அதிகமான மூலப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம், பல்வேறு கட்டங்களாகச் சமைக்கிறோம், விதவிதமாகவும் சமைக்கிறோம். அதில் சிலவற்றை எங்கள் எந்திரம் சிறப்பாக சமைக்கிறது. இது ஒரே நேரத்தில் மூன்று வகை உணவுகளைச் சமைத்துவிடும்’’ என்கிறார் சர்மா பெருமையாக!

இங்கிலாந்து தானியங்கி சமையல் எந்திரம் ‘மோலி’, ரூ.9 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. அதோடு ஒப்பிடும்போது பெங்களூரு மெஷினின் விலை குறைவுதான். ரூ. 25 ஆயிரம்!

இந்தியாவில் கஷ்டப்பட்டு சமைப்பவர்களுக்காக ஒரு தானியங்கி சமையல் எந்திரத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று கார்லோஸ் கடந்த 2012-ம் ஆண்டிலேயே தீர்மானித்துவிட்டாராம். ‘அப்படி நீங்கள் ஏதாவது செய்தால் உங்களுக்கு பெரிய புண்ணியம் கிடைக்கும். சமையல் அறையில் சமைத்து கஷ்டப்படும் பெண்களுக்கு தினமும் 3 மணி நேரம் மிச்சமாகும்’ என்று அவரின் சக ஊழியை கூறினாராம்.

ஆனால் இதை நனவாக்க கார்லோஸுக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கிறது. மொத்தம் 21 பாகங்கள் கொண்ட இந்த எந்திரத்தை அவ்வப்போது எளிதில் கழற்றி சுத்தம் செய்து மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும், சமையலின்போது வெளியாகும் ஆவியால் மசாலாப் பொருட்கள் கெட்டியாகிவிடக்கூடாது, அதன் பாகங்களைப் பாதித்துவிடக் கூடாது என்று பல சவால்கள் இருந்திருக்கின்றன. அப்படி படிப்படியாக முயற்சித்துப் பார்த்துப் பார்த்து இந்த எந்திரத்தை கார்லோஸ் உருவாக்கியிருக்கிறார். இதன் மின்னியல், மின்னணுவியல் அம்சங்களைக் கவனித்துக்கொள்வதற்காக அர்பித்தையும் தன்னுடன் இணைத்துக்கொண்டிருக் கிறார்.

இல்லத்தரசிகள், பணிபுரியும் பெண்கள், பேச்சிலர்கள் மட்டுமின்றி, தங்களைப் போன்ற ஒன்றும் தெரியாத சமையல்காரர்களையும் குறிவைத்துத்தான் இம்மெஷினை உருவாக்கியிருப்பதாக இந்த இருவரும் கூறுகிறார்கள்.

இ்ந்த மெஷினுக்கு சமையலுக்கான செய்முறைகளை அளித்தது, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி. அவர் அளித்த, 30 விதமான செய்முறை களின்படி இப்போதைக்கு சமையல் எந்திரம் சமைக்கிறது. எதிர்காலத்தில் ஆப் மூலம் அம்மாவின் கைமணம் மாதிரிகூட சமைக்கச் செய்ய முடியுமாம்.

அதேபோல, செல்போன் மூலம், நீங்கள் அலுவலகத்தில் இருந்து கிளம்பும்போதே உத்தரவிட்டு சமையல் ‘ஆக்கி’ வைத்துவிடச் சொல்ல முடியும். ஆனால், நீங்கள் ஏற்கனவே அதில் தேவையான மூலப் பொருட்களை இட்டு வைத்திருக்க வேண்டும். வீட்டில் இருக்கும்போது, வாய்மொழியால் உத்தரவிட்டும் சமைக்கச் சொல்லும் வசதியும் வருமாம். மேலும் நீளமான ‘மெனு’வை உருவாக்குவதற்காக, அதற்கான செய்முறை விளக்கங்களை அளிக்க உணவக சமையல்காரர் ஒருவரையும் கார்லோஸும், அர்பித்தும் தற்போது வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள்.

கண்காட்சி ஒன்றில் இந்த எந்திரத்தை காட்சிக்கு வைத்திருந்தார்கள். அப்போது சுமார் 200 பேருக்கு இது உருளைக்கிழங்கு பொரியல் தயாரித்துக் கொடுத்துள்ளது. அதை ருசித்துப் பார்த்த ஒரு பெண்மணி, கையோடு இந்த எந்திரத்தை வாங்கிச் செல்வது என்று ஒற்றைக்காலில் நின்றாராம். அவரது கணவர்தான், நான் இருக்கும்போது (!) சமையல் எந்திரம் எதற்கு என்று சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றாராம்.

இப்போதைக்கு, 25 பேர் இந்த மெஷின் சமையல்காரரின் சமையலை ருசித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே ருசி நன்றாக இருப்பதாக சான்றிதழ் கொடுக்கிறார்கள்.

சுவையாக இல்லாவிட்டாலும், மனைவியைபோல் எந்திரத்தை வசைபாட முடியாதே!

Next Story