பிறந்தநாள் ‘மரங்கள்’
15 ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் பிடியில் சிக்கி இருந்த கிராமத்தில் இன்று இரண்டு லட்சம் மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.
15 ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் பிடியில் சிக்கி இருந்த கிராமத்தில் இன்று இரண்டு லட்சம் மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. அன்று தண்ணீர் பிரச்சினையால் பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்த அந்த கிராமத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள், முறையான பராமரிப்பின் காரணமாக இன்று சிறப்பாக வளர்ந்து கிராமத்தையே சோலைவனமாக மாற்றியிருக்கிறது. அந்த கிராமத்தின் பெயர் ரன்மாலா. இது மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் அமைந்திருக்கிறது.
2003-ம் ஆண்டில் ரன்மாலா கிராமத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பி.டி. சிண்டே கிராம மக்களிடம் மரக்கன்றுகளை வளர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அவருடைய அறிவுறுத்தலின்படி கிராமத்தில் யாருக்காவது குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு மரக்கன்றுகளை கிராம மக்கள் பரிசாக வழங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு மரக்கன்றுகளிலும் அந்த குழந்தையின் பெயர் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் இறப்பு, திருமணம் என எந்த விஷேச நிகழ்ச்சி நடந்தாலும் மறக்காமல் மரக்கன்றுகளை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளின்போதும் மரக்கன்றுகளை வளர்ப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்கள். வீட்டில் நடக்கும் எல்லா விஷேச தினங்களிலும் இதே நடைமுறையை பின்பற்றி வந்திருக்கிறார்கள். அவை இப்போது கிராமத்திற்கு தனித்துவ அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன. மகாராஷ்டிரா அரசு இந்த கிராமத்தை முன்மாதிரியாகக் கொண்டுள்ளது.
‘‘நாங்கள் ரன்மாலா கிராமத்தை பார்வையிட்டோம். மரக்கன்று வளர்ப்பதில் இந்த கிராமத்தினரின் யோசனை சிறப்பாக இருக்கிறது. யாருடைய வீட்டில் குழந்தை பிறந்தாலும் மரக்கன்றை பரிசாக வழங்குகிறார்கள். அந்த குழந்தையை வளர்ப்பது போலவே மரக்கன்றுகளையும் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்துவிடுகிறார்கள். அதேபோல் யாராவது இறந்தாலோ, மங்களகரமான நிகழ்ச்சிகள் நடந்தாலோ அப்போதும் மரக்கன்றுகளை வழங்குகிறார்கள். பிறந்த குழந்தைக்கு கொடுக்கப்பட்ட மரக்கன்றை அந்த குழந்தை டீன் ஏஜ் பருவத்திற்கு வந்ததும் தன் பிறப்பின் நினைவாக அக்கறையோடு பராமரிக்கிறது. அந்த மரம் பழங்களையும் வழங்குகிறது. இந்த முயற்சி பாராட்டுக்குரியது’’ என்கிறார், வனத்துறை அதிகாரி, விகாஸ் கார்கே. மரக்கன்று வளர்ப்பில் காண்பிக்கும் ஆர்வத்தை பாராட்டி இந்த கிராமத்திற்கு ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story