உடலுக்கு தேவை ஒருங்கிணைந்த பயிற்சி
‘‘விபத்தில் சிக்கியவர்கள், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், பக்கவாத பாதிப்புக்கு ஆளானவர்கள் போன்றவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையே ‘பிசியோதெரபி’ என்ற எண்ணம் பெரும்பாலானோரிடம் இருக்கிறது.
‘‘விபத்தில் சிக்கியவர்கள், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், பக்கவாத பாதிப்புக்கு ஆளானவர்கள் போன்றவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையே ‘பிசியோதெரபி’ என்ற எண்ணம் பெரும்பாலானோரிடம் இருக்கிறது. உடல் இயக்கம் சீராக நடைபெறுவதற்கு பிசியோதெரபியின் பங்களிப்பு முக்கியமானது. உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க எளிமையான பிசியோதெரபி பயிற்சிகளை தினமும் செய்து வர வேண்டும். இதுவும் உடற்பயிற்சி போலவே ஒருவகை பயிற்சிதான். உடல் தசைகளை இலகுவாக்கும் வகையில் உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக இந்த பயிற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்கிறார், கல்பனா.
34 வயதான இவர் பிசியோதெரபி நிபுணர். சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருத்துவ துறை சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்பது கல்பனாவின் சிறு வயது ஆசையாக இருந்திருக்கிறது. அந்த அடிப்படையில் நோயாளிகளின் உடல் நலத்தையும், மனநலத்தையும் மீட்டெடுக்கும் பிசியோதெரபி படிப்பை தேர்ந்தெடுத்து படித்தவர், தமிழ்நாட்டின் சிறந்த பெண் பிசியோதெரபி நிபுணர் என்ற விருதை பெற்றுள்ளார். ‘மெரிட் அவார்டு மார்க்கெட் ரிசர்ச்’ என்ற அமைப்பு மருத்துவதுறையில் முக்கிய பங்களிப்பு செய்பவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. டெல்லியில் நடந்த இதற்கான விழாவில் மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் இருந்து விருதை பெற்றுள்ளார்.
உடலுழைப்பு குறைந்துவரும் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் உடலை வலுவாக வைத்திருப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்தும், அதற்கும் பிசியோதெரபிக்கும் உள்ள தொடர்பு பற்றியும் கல்பனா விவரிக்கிறார்.
‘‘நான் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. மருத்துவ துறை மீது இருந்த ஈடுபாட்டால் நுழைவுத்தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று பிசியோதெரபி படிப்பில் சேர்ந்தேன். டாக்டராக முடியவில்லையே என்ற சிந்தனைக்கு இடம் கொடுக்காத அளவிற்கு அந்த படிப்பு மன நிறைவை தந்தது. பிசியோதெரபி நிபுணராகி நோயாளிகளுக்கு மனதளவிலும், உடல் அளவிலும் சிகிச்சை அளிக்க முடிகிறது. அவர்களோடு அதிக நேரம் செலவிட்டு அன்பாக பழகவும், நோயின் வீரியத்தை குறைத்து உடல் இயக்கங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதும் சாத்தியமாகிறது. அவர்களுக்கு நம்பிக்கையூட்டி மறுவாழ்வை ஏற்படுத்தி கொடுக்கும் உன்னதமான பணியாகவும் பிசியோதெரபி அமைந்திருக்கிறது. நான் படித்த காலகட்டத்தில் ஒருசில நோய்களுக்கு மட்டுமே பிசியோதெரபி பயன்பாட்டில் இருந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை. உணவு பழக்கமும், உடல் உழைப்பும் குறைந்து கொண்டிருப்பது உடல் இயக்கங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக கழுத்துவலி, மூட்டுவலி, முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆண்களைவிட பெண்கள்தான் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள்’’ என்பவர், பெண்கள் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை விளக்குகிறார்.
‘‘முன்பு துணி துவைப்பது, வீட்டை பெருக்குவது, சமையல் செய்வது என அனைத்துவிதமான வீட்டு வேலைகளிலும் பெண்களின் உடல் உழைப்பு முழுவதுமாக இருந்தது. இப்போது பாதி வேலைகளை மெஷின்கள்தான் செய்கின்றன. தரையில் உட்கார்ந்துகொண்டு வீட்டு வேலை செய்பவர்கள் குறைந்துபோய்விட்டார்கள். டைனிங் டேபிள்கள், ஷோபாக்கள், நாற்காலிகளில் அமர்ந்து பழக்கப்பட்டுவிட்டதால் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்வதில்லை. தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதைவிட டைனிங் டேபிள்தான் சவுகரியமாக இருப்பதாக கருதுகிறார்கள்.
உட்கார்ந்து எழுவது, குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது இடுப்பு எலும்புகளுக்கு வலு சேர்க்கும். உடல் உறுப்புகளுக்கு வேலை கொடுப்பது குறைந்து விட்டதால் தசைகளுக்கு வலிமை இல்லாமல் போய்விடுகிறது. அதனால் உடல் அமைப்பும் மாறிக்கொண்டிருக்கிறது. 40 வயதை கடந்த பெண்கள் கால்சியம் குறைபாடு பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். அதனால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது. இடுப்பு, தொடை, மூட்டு பகுதி தசையில் சக்தி இல்லாமல் போய்விடுகிறது.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது எழுந்து தசைகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அப்படியே அமர்ந்து இருந்தால் தசைகளில் இறுக்கம் அதிகமாகிவிடும். கை, கால்களை அசைத்து தசைகளின் அழுத்தத்தை குறைக்க வேண்டும். பெண்கள்தான் மூட்டுவலி பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவ்வப்போது தொடைப்பகுதியை விரிந்து கால் பாதங்கள் இரண்டையும் ஒட்டிவைக்கவேண்டும். ஏனெனில் தொடைகள் இறுக்கமானால் மூட்டுவலி உண்டாகிவிடும்.
மூட்டுக்கும், தொடைக்கும் இடையே உள்ள தசைகளின் அழுத்தத்தை குறைத்து இலகுவாக்கிக்கொள்ள வேண்டும். மூட்டு வலிக்கும் தரைக்கும் தொடர்பு இருக்கிறது. இப்போதெல்லாம் வீட்டு தரைத்தளங்களை டைல்ஸ்கள்தான் ஆக்கிரமிக்கின்றன. நடக்கும்போது கால்களில் இருந்து வெளிப்படும் அழுத்தத்தை தரை ஈர்த்துக்கொள்ளும். ஆனால் டைல்ஸ் தரை அந்த அழுத்தத்தை உள்வாங்கிக்கொள்ளாமல் பிரதிபலிக்கும். அதனால் அழுத்தம் திரும்பவும் மூட்டு பகுதிக்கு சென்றுவிடும். அதனால் நாளடைவில் மூட்டுவலி ஏற்பட தொடங்கிவிடும். இந்த பிரச்சினையை தவிர்க்க வீட்டில் செருப்பு போட்டு நடக்கலாம். அதனை விரும்பாதவர்கள் தரைத்தளத்தில் கார்பெட் விரித்து அதில் நடமாடலாம். கடற்கரை மணலில் வெறும் காலில் நடக்கலாம். அது பாதம், மூட்டு, இடுப்பு தசைகளின் அழுத்தத்தை குறைக்க உதவும். தசைகளுக்கு வலிமையையும் அதிகரிக்க செய்யும்.
பெண்கள் எப்போதுமே உடல் நலனில் விழிப்பாக இருக்க வேண்டும். சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டும். நிறைய பேர் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. காலை உணவையும் தவிர்க்கிறார்கள். அது உடல்பருமனை உருவாக்கிவிடும். நாளடைவில் நீரிழிவு, ரத்தசோகை, தைராய்டு போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும். உடல் பருமன் பிரச்சினையால் தசைகளும் பாதிப்புக்குள்ளாகிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் உடற்பயிற்சிகளை செய்துவர வேண்டும். காலையில் எழுந்ததும் மிதமான சுடுநீரில் கல் உப்பை சேர்த்து பாதங்களை 10 நிமிடம் முக்கி வைக்கலாம். கீழே குனிந்து பாதங்களை தொடுவது, உட்கார்ந்துகொண்டு கைவிரலால் கால் விரலை தொடுவது, தரையில் உட்கார்ந்து சம்மணமிட்டு சாப்பிடுவது போன்ற செயல்கள் தசைகள் இறுக்கமாவதை தவிர்க்கும். தூங்கி எழுந்ததும் விலங்குகள் வளைந்து நெளிந்து உடல் உறுப்புகள் அனைத்தையும் தளர்வடைய செய்துவிடும். ஆனால் நாம் அப்படி செய்வதில்லை. உடல் உறுப்பு தசைகள் அழுத்தமின்றி இருந்தாலே உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்’’ என்கிறார்.
சுகப்பிரசவம் குறைந்து சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்திருப்பதற்கு பெண்களின் உடல் ஆரோக்கிய பிரச்சினைதான் முக்கிய காரணம் என்பது கல்பனாவின் கருத்தாக இருக்கிறது.
‘‘கர்ப்பிணி பெண்களின் இடுப்பு எலும்பு தசைகள் வலுவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பிரசவத்தின்போது இடுப்பு எலும்பு தசைகளால் குழந்தையை உந்தி வெளியே தள்ள முடியும். அவை வலுவாக இருப்பதற்கு சத்தான ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். உடற்பயிற்சிகள் மூலம் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்திற்கு முன்பும், பின்பும் ஒருசில பயிற்சிகளை மேற்கொள்வது நல்ல பலன் கொடுக்கும். இடுப்பு எலும்பு தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை பிசியோ தெரபி நிபுணரின் ஆலோசனை பெற்று செய்து வர வேண்டும். அது சுகபிரசவத்தை எளிதாக்கும். குறை பிரசவத்தை தடுக்கவும் உதவும்.
பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு உடல் பருமன், தொப்பை பிரச்சினை உருவாகும். குழந்தை பிறந்த பிறகு வயிற்றில் உள்ள தசைகள் வலு குறைந்து தொங்க ஆரம்பித்துவிடும். அப்போது அதிக எடையுள்ள பொருட்களை தூக்கினாலோ, குனிந்து கடினமான வேலைகளை செய்தாலோ குடல் இறக்கம் என்ற பிரச்சினையும் ஏற்படும். ஒருசிலருக்கு வயிற்று தசைகள் பிரிந்து வெளியே வந்துவிடும். பிரசவத்தின்போது வேதனையை குறைப்பதற்காக முதுகு தண்டுவடத்தில் போடப்படும் ஊசியின் பாதிப்பு சில மாதங்களுக்கு பின் வெளிப்படும். முதுகுவலி பிரச்சினையால் நிறைய பேர் அவதிப்படுவார்கள். இத்தகைய பிரச்சினைக்கெல்லாம் பிசியோதெரபி சிகிச்சை முறையில் தீர்வு இருக்கிறது. முறையான பயிற்சிகளை செய்து வந்தால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம்’’ என்கிறார்.
உடல் இயக்கங்கள் சீராக நடைபெறுவதற்கு முதுகுதண்டுவடத்தின் செயல்பாடு முக்கியமானது. விபத்தில் சிக்கி முதுகுதண்டுவட பாதிப்புக்கு ஆளாகிறவர்களை சிகிச்சை மூலம் மீட்டெடுப்பது சவாலான பணி என்கிறார், கல்பனா.
‘‘விபத்துகளால் மட்டுமே முதுகுதண்டுவடம் பாதிக்கப்படுவதில்லை. கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அதற்கேற்ப நாற்காலிகளை தேர்வு செய்ய வேண்டும். சரியான முறையில் உட்கார்ந்திருக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் முதுகுதண்டுவட வடிவமைப்பே மாறி போய்விடும். அதற்கு அதிக அழுத்தம் கொடுத்தால் வலி ஏற்பட தொடங்கிவிடும். முதுகு தண்டுவட நரம்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஒட்டுமொத்த உடல் இயக்கமே முடங்கிபோய்விடும். தண்டுவட பாதிப்பால் உடல் செயலிழந்து போனவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஏராளம். இப்போது இளைஞர்கள் கூட அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் விபத்தில் சிக்காமல் விழிப்புடன் வாழ வேண்டும்’’ என்கிறார், கல்பனா.
இந்த தம்பதியருக்கு ஹோஷிகா, மதுமிதா ஆகிய இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
Related Tags :
Next Story