தாயின் நிழலில் ஒரு தங்கத் தாரகை


தாயின் நிழலில் ஒரு தங்கத் தாரகை
x
தினத்தந்தி 15 July 2018 5:09 PM IST (Updated: 15 July 2018 5:09 PM IST)
t-max-icont-min-icon

தாயிடம் இருந்து நம்பிக்கையும், தந்தையிடம் இருந்து ஊக்கமும் கிடைத்தால், எந்த பெண்ணாலும் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் வர்ஷா.

தாயிடம் இருந்து நம்பிக்கையும், தந்தையிடம் இருந்து ஊக்கமும் கிடைத்தால், எந்த பெண்ணாலும் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ் கிறார் வர்ஷா. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி. சர்வதேச பீச் வாலிபால் வீராங்கனை. மூன்று சர்வதேச போட்டிகளில் விளையாடி இருப்பவர். பிளஸ்-1 பொதுத்தேர்வின் போதும் தாய்லாந்தில் நடந்த சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு இந்திய அணிக்காக விளையாடியவர். காலையிலும், மாலையிலும் இவர் கடும் பயிற்சியினை மேற்கொண்டாலும் படிப்பிலும் சுட்டி. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இவர் பெற்ற மதிப்பெண் 487. இவருடைய சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம். இவரது பெற்றோர்: தியாகராஜன்- மீனாட்சி.

விளையாட்டிலும், படிப்பிலும் சுட்டியாக விளங்கும் வர்ஷாவிடம், ‘உங்கள் சாதனைக்கு யார் காரணம்? என்று கேட்டால், தனது தாயாரை சுட்டிக்காட்டுகிறார். “ஆமாம் நாங்கள் வர்ஷாவை விளையாட அனுமதித்ததன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித் திருக்கிறோம். அதனால்தான் அவள் படிப்பிலும் சிறந்து விளங்குகிறாள்” என்கிறார், மீனாட்சி.

குழந்தைகளை விளையாட அனு மதித்தால் படிப்பு கெட்டுவிடும் என்று கூறும் தாய்மார்களுக்கு மத்தியில், ‘விளையாடாவிட்டால் படிப்பு கெட்டுப்போகும்’ என்று கூறும் மீனாட்சி வித்தியாசமானவர்.

மீனாட்சியின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள அண்ணாநகர். மிகவும் கட்டுப்பாடான குடும்பம். பெண்களை 10-ம் வகுப்புக்கு மேல் படிக்க வைப்பது அபூர்வம். 10-ம் வகுப்பு முடித்துவிட்டாலே திருமணம் செய்துவைத்து விட வேண்டும் என்பது அவர்களது முந்தைய வழக்கம். இந்த வழக்கத்தை மாற்றிக் காட்டியிருக் கிறார், மீனாட்சி. அதை பற்றி அவரே சொல்கிறார்:

“நான் 10-ம் வகுப்பு முடித்தவுடன் என் வீட்டில் திருமண பேச்சை ஆரம்பித்தார்கள். உடனே நான் எனது தந்தையிடம், ‘இப்போது திருமணம் செய்துகொள்ளமாட்டேன். தொடர்ந்து படிப்பேன்’ என்று கூறினேன். அவர் அந்த காலத்திலேயே நன்கு படித்தவர். அதனால் அவருக்கும் என்னை படிக்கவைக்க வேண்டும் என்ற ஆசைதான் இருந்தது. ஆனாலும் குடும்ப வழக்கம் அவரையும் சற்று குழம்பவைத்துவிட்டது. நான் பிடிவாதமாக 12-ம் வகுப்புவரை படித்தே தீருவேன் என்று அடம் பிடித்தேன்.

இறுதியில் எனது பிடிவாதம் ஜெயித்தது. கொடுமுடியில் உள்ள பள்ளியில் சேர்ந்து படித்து பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றேன். பின்பு கல்லூரிக்கு சென்று படிக்கப் போகிறேன் என்றேன். ஆனால், அப்போது எனது எண்ணம் வெற்றி பெறவில்லை. குடும்ப வழக்கப்படி திருமணம் செய்து வைத்தனர்.

எங்கள் குடும்பத்தை போன்று என் புகுந்த வீடும் விவசாய குடும்பம்தான். என் கல்விக் கனவை தற்காலிகமாக மூட்டைகட்டி வைத்து விட்டு குடும்ப நிர்வாகத்திலும், விவசாயத்திலும் முழு கவனத்தை செலுத்தினேன். மகன் ஜீவானந்தமும், பின்பு வர்ஷாவும் பிறந்தார்கள். அவள் வளர்ந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு கைப்பந்து பயிற்சி நடைபெறுவதை ஆர்வமாக பார்ப்பாள். ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது தானும் கைப்பந்து விளையாட ஆசைப்படுவதாக சொன்னாள். நாங்களும் விளையாடுவது நல்லதுதான் என்று அனுமதித்தோம். அந்த சிறுவயதிலேயே பயிற்சியாளர் சக்திவேல், வர்ஷாவின் திறமையை கண்டு அவளுக்கு முக்கியத்துவம் அளித்தார்.

எனது கணவர் தியாகராஜன் தினமும் பயிற்சிக்கு அழைத்துச்சென்று கூட்டி வருவார். விளையாட்டில் வேகமாக முன்னேறிய அவள் எட்டாம் வகுப்பு படிக்கும்போது தேசிய அணிக்கு தேர்வு பெற்றாள். அப்போது பயிற்சிக்கு அவள் தனியாக செல்ல வேண்டும் என்ற நிலை உருவானது. அவளது தந்தைக்குதான் அது அதிர்ச்சியாக இருந்தது. எப்போதும் அவரை சுற்றிச் சுற்றி வந்த குழந்தை தனியாக போய் எப்படி சமாளிப்பாளோ என்று அவர் கவலைப்பட்டார். அப்போது, தனியாக சென்று சாதிக்கும் ஆற்றல் வர்ஷாவிடம் இருக்கிறது என்று கூறி நான் நம்பிக்கையூட்டினேன். திறமையை நிரூபித்து இந்திய அணியில் இடம் பிடித்த அவள், பிரேசில் நாட்டுக்கு சென்று விளையாடி விட்டு வந்தாள். அப்போது பலரும் என்னை பார்்த்து வர்ஷாவின் அம்மா என்று கூறியது எனக்கு பெருமையாக இருந்தது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மீனாட்சி தற்போது ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! அதையும் அவரே விளக்குகிறார்:

“குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நிலையில் ஒருநாள், எனது கணவரின் தம்பி ‘இப்படியே நீங்கள் காட்டுல வேலை செய்துகொண்டு இருந்தா என்ன ஆகப் போகுது. நாமக்கல்லில் புதிதாக ஆசிரியர் பயிற்சி கல்லூரி தொடங்க போறாங்க. அதில் சேர்ந்து படிக்கலாமே!’ என்றார். பல வருடங்களாக என் அடிமனதில் புதைந்துகிடந்த கல்வி ஆசை அவரால் மீண்டும் துளிர்விட்டது. கணவர் உறுதுைணயாக இருக்க, நான் படிக்க விண்ணப்பித்தேன். இடம் கிடைத்தது. நான் ஆசிரியர் பயிற்சி முடிக்கும் வரை குடும்ப பொறுப்புகளை என் கணவர் கூடுதலாக கவனித்துக் கொண்டார்.

வர்ஷா அவரையே சுற்றிச்சுற்றி வருவாள். நான் அவளை படிக்க சொன்னால், ‘அம்மா நீங்க படிக்கிற வேலையை பாருங்க... நான் எனது பாடத்தை படித்துக்கொள்கிறேன்’ என்று கூறுவாள். ‘எனது குழந்தை களுக்கு நான்தான் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அவர்கள் படிக்கிற வயதில் நானும் படிக்கிறேன். அவர் களுக்கு அறிவுரை கூறுவதென்றால், நான் படிப்பில் சிறந்தவளாக இருக்க வேண்டும். எனவே நான் வெற்றி பெற்றே ஆகவேண்டும்’ என்ற உத்வேகத்துடன் படித்தேன். வெற்றியும் பெற்றேன்.

பின்பு நான் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தேன். மீண்டும் எனது குழந்தைகளின் முன்பு என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முழுநேரமும் படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மூலம் அரசு பள்ளிக்கூட ஆசிரியையாக பணி நியமனம் பெற்றேன்” என்று கூறும் மீனாட்சி தற்போது திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள ஊடையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றுகிறார்.

வர்ஷா கைப்பந்து போட்டியில் சிறந்து விளங்கியபோது, ஒரு முறை 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பீச் வாலிபால் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு பயிற்சி அளித்தவர் நம்பியூரை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார். வர்ஷாவின் திறமையை கண்டுகொண்ட அவர் பின்பு தொடர்ந்து பீச் வாலிபாலுக்கு வர்ஷாவை தயார் செய்தார். இதனால் 10-ம் வகுப்பு படித்தபோது தேசிய பீச் வாலிபால் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிகளுக்கு இடையேயான தேசிய பீச் வாலிபால் போட்டியில் பங்கு பெற்ற வர்ஷா தங்கப்பதக்கம் வென்றார். பின்பு பிரான்ஸ் நாட்டுக்கு சென்று இந்திய அணியில் விளையாடினார்.

“11-ம் வகுப்பில் வர்ஷாவை நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளியில் சேர்த்தோம். அப்போது இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு பெற்று தாய்லாந்து சென்று விளையாடினார். 11-ம் வகுப்பு பொதுதேர்வு நடந்தபோது அந்த போட்டி நடந்தது. என்னதான் விளையாட்டுக்கு முக்கியம் என்றாலும் தேர்வின்போது விளையாட சென்றுவிட்டால் பரீட்சை எழுத முடியாதே என்ற அச்சம் எங்களுக்கு வந்தது. ஆனால், அவள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. முதல்நாள் கணிதம் தேர்வு எழுதிவிட்டு தாய்லாந்து புறப்பட்டாள். அடுத்த 5 நாட்கள் விளையாடி விட்டு, 6-வது நாள் வீடு வந்தவள் 7-வது நாள் இயற்பியல் தேர்வு எழுதினாள். தேர்வு முடிவின்போது அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தாள்” என்றுகூறி மகிழ்கிறார், தியாகராஜன்.

இவர்களின் மகன் ஜீவானந்தம் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். 12-ம் வகுப்பு படித்து வரும் வர்ஷாவுக்கு குமுதா பள்ளிக்கூடத்தில் கல்வி இலவசமாக வழங்கப்பட்டாலும் பயிற்சி மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவை பெற்றோர்தான் செய்து வருகிறார்கள். “எங்களுக்கு மூன்றரை ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. அதில் 2 ஏக்கரை விற்று மகனை படிக்க வைக்கிறோம். மகளின் விளையாட்டுக்காகவும் செலவு செய்து வருகிறோம். அவர்களின் கனவை நனவாக்குவதே எங்கள் கடமை” என்கிறார்கள், பெற்றோர். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற ஆசை வர்ஷாவுக்கு இருக்கிறது. இவரது தற்போதைய இலக்கு, கடுமையான பயிற்சி எடுத்து இந்திய பீச் வாலிபால் அணிக்காக வெற்றிகளை குவிப்பது! வாழ்த்துவோம்!!

Next Story