‘கல்லூரிகளில் ராகிங் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்’ கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு


‘கல்லூரிகளில் ராகிங் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்’ கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு
x
தினத்தந்தி 16 July 2018 4:30 AM IST (Updated: 15 July 2018 11:26 PM IST)
t-max-icont-min-icon

‘தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் ராகிங் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்’ என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங்கை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தூத்துக்குடி மாவட்டத்தில் 48 கலைக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகள் ராகிங் நடைபெறுவதை தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் (அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்பட) கல்லூரி முதல்வர் தலைமையில் ராகிங் தடுப்பு குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் விடுதி காப்பாளர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும். கல்லூரி வளாகங்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளில் அனைத்து மாணவர்களும் அறியும் வகையில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்தும், கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள ராகிங் தடுப்பு குழுவின் உள்ள உறுப்பினர்களின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையின் பின்புறம் ராகிங் தடுப்புக்கான இலவச அழைப்பு எண் 1800 180 5522 அச்சிடப்பட வேண்டும். கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் முந்தைய வகுப்பு மாணவர்களோடு ராகிங் குறித்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கலந்துரையாடல் நடத்த வேண்டும். கல்லூரி மாணவர்களிடம் ராகிங் குறித்து விழிப்புணர்வு முகாம்கள், நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கல்லூரி வளாகத்தில் மைதானம், கேன்டீன் உள்பட அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கல்லூரி பஸ்களிலும் கண்காணிக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் ராகிங் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, உதவி கலெக்டர் பிரசாந்த், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், உதவி கலெக்டர்கள் விஜயா (கோவில்பட்டி), தங்கவேலு (திருச்செந்தூர்), கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாண்டியம்மாள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story