குன்னூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து, 23 பேர் படுகாயம்
குன்னூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் படுகாயம் அடைந்தனர்.
குன்னூர்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஊழியர்கள் 23 பேர் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் நேற்று முன்தினம் வேன் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டனர். வேனை வாணியம்பாடி பகுதியை சேர்ந்த வசந்த ரூபன் (வயது 31) என்பவர் ஓட்டி வந்தார்.
ஊட்டிக்கு வந்த 23 பேரும் இங்கு சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர் நேற்று வேனில் தங்கள் ஊருக்கு திரும்பினர். குன்னூர்– மேட்டுப்பாளையம் சாலையில் பகல் 12.30 மணிக்கு மரப்பாலம் அருகே வேன் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று வேனில் பிரேக் பிடிக்காமல் போனது. டிரைவர் வசந்த ரூபன் வேனை கட்டுபடுத்த முயற்சி செய்தும் முடியவில்லை.
பின்னர் சிறிது நேரத்தில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மண் திட்டில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த சுற்றுலா பயணிகள் 23 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொருவராக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மாதவன் (வயது 38), விக்னேஷ் (25), முத்துக்குமார் (39), விஷ்ணு ராம் (40), சமியுல்லா (23) கோகுலம் (30) ஆகிய 6 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது நீலகியில் மழை பெய்து வருவதால் சுற்றுலா வருபவர்கள் மிகவும் கவனத்துடன் வாகனங்களை ஓட்ட வேண்டும். அதேநேரம் மலைப்பாதையில் வாகனத்தை ஓட்டிச்செல்லும் முன்பு பிரேக் சரியாக உள்ளதா? என்பதை நன்கு உறுதி செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக மலைப்பாதையில் எவ்வாறு வாகனங்களை இயக்கி செல்ல வேண்டும் என்பதை நன்கு அறிந்து இருக்க வேண்டும், என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.