கிருஷ்ணகிரியில் மக்கள் நீதிமன்றம்: 735 வழக்குகளுக்கு சமரச தீர்வு


கிருஷ்ணகிரியில் மக்கள் நீதிமன்றம்: 735 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 16 July 2018 4:45 AM IST (Updated: 16 July 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்ற முகாமில் 735 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

கிருஷ்ணகிரி,


கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. இதை மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.பூர்ணிமா தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி வக்கீல்கள் சங்க தலைவர் அசோக் ஆனந்த், செயலாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா பேசியதாவது:-


உச்சநீதிமன்ற உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய அளவிலான லோக் அதாலத் முகாம் நடத்தப்படுகிறது. இதில் 10 அமர்வுகள் மூலமாக வழக்குகள் தீர்வு காணப்படுகிறது. சமுதாயத்தில் இரு நபர்களிடையே பிரச்சினைகள் வரும் போது அதை தீர்க்க என்ன வழி என்று எண்ணி பார்க்க வேண்டும். மாறாக சண்டை, சச்சரவுகளுடன் கடைசி வரை பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் இருக்க கூடாது.

இது போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாவட்ட அளவில் இலவச சட்ட உதவி மையங்கள் மற்றும் சமரச தீர்வு மையங்கள் மூலம் சமாதான தீர்வுகளை எடுத்து கொள்ள வேண்டும். இந்த லோக் அதாலத் முகாமை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலமாக 6 ஆயிரத்து 344 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, 735 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 76 லட்சத்து 60 அயிரத்து 558 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டுள்ளது.


உறவுகள் தொடர்பான வழக்குகள் எந்த காரணம் கொண்டும் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். முடிந்த வரையில் பேசி தீர்த்து கொள்ள வேண்டும். விட்டு கொடுத்தால் யாரும் கெட்டு போவதில்லை. நிரந்தரமில்லா வாழ்க்கையில் எல்லோரும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். எந்த மாதிரியான வழக்குகளாக இருந்தாலும் லோக் அதாலத் தேசிய மக்கள் நீதிமன்றம் மற்றும் இலவச சட்ட நீதி மையங்கள் உங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில் கூடுதல் மாவட்ட நீதிபதி கலாவதி, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, முதன்மை குற்றவியல் நீதிபதி பாலசுப்பிரமணியன், முதன்மை சார்பு நீதிபதி மோனிகா, சிறப்பு சார்பு நீதிபதி லீலா, மாஜிஸ்திரேட்டுகள் ஜெயப்பிரகாஷ், சுல்தான் அர்வின்மற்றும் அரசு வக்கீல்கள், சிறப்பு வக்கீல்கள், கூடுதல் வக்கீல்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி எஸ்.தஸ்னீம் நன்றி கூறினார்.

Next Story