அனைத்து துறைகளிலும் வளர்ச்சி காணும் மாநிலமாக தமிழகம் உள்ளது - முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
மதுரையில் பாலம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து துறைகளிலும் வளர்ச்சி காணும் மாநிலமாக தமிழகம் விளங்குவதாக கூறினார்.
மதுரை,
தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் மதுரை காளவாசல் சந்திப்பில் ரூ.54 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா காளவாசலில் நேற்று காலை நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பாஸ்கரன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–
மதுரை காளவாசல் சந்திப்பில் முதன் முறையாக ரூ.54.07 கோடி மதிப்பீட்டில் நான்கு வழித்தடத்துடன் கூடிய சாலை மேம்பாலம் அமைக்க இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், சந்திப்பில் வாகன காத்திருப்பு நேரம் வெகுவாக குறையும். மேலும் அருகில் உள்ள அரசரடி சந்திப்பும், இந்த பணியுடன் இணைந்து மேம்படுத்தப்பட உள்ளது.
மேலும் கோரிப்பாளையத்தில் விரைவில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கும். அங்கு குறைந்த அளவில் நில ஆர்ஜிதம் செய்து பணிகள் தொடங்கும் வகையில் மறுஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. செல்லூர் ரெயில்வே மேம்பாலத்தின் அணுகு சாலையில் விபத்தினை குறைக்கும் பொருட்டு, குலமங்களம் சாலையை அடைய உரிய சேவைச் சாலை ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. மதுரை எம்.ஜி.ஆர் பஸ் நிலையம் முதல் கூடல்நகர் வானொலி நிலையம் வரை புதிய நான்குவழி இணைப்புச்சாலை ரூ.50 கோடி செலவில் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல, பாண்டிக்கோவில் அருகில் மதுரை–தொண்டி சாலை மற்றும் மதுரை சுற்றுச்சாலை சந்திப்பில் ரூ.56 கோடியில் மேம்பாலம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும். ரூ.16 கோடி செலவில் வைகை ஆற்றின் வடகரையில் குருவிக்காரன் சாலை முதல் அண்ணாநகர் பாலம் வரை சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்குகின்றன.
மதுரை மாநகர மக்களின் நீண்டகால கனவுகளை ஜெயலலிதாவின் அரசு நிறைவேற்றி தந்து கொண்டு இருக்கிறது. அதுமட்டுமல்ல, வைகை ஆற்றில் நீர் செல்கின்ற போது, இந்த நகரத்தின் கழிவு நீரை எல்லாம் ஆற்றில் கலக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நீர் மாசுபடுகின்றது. எனவே அதனை தடுப்பதற்காக ஆங்காங்கே சுத்திகரிப்புநிலையம் அமைக்கப்படும். அங்கு கழிவு நீரை சுத்திகரித்து ஆற்றில் விடப்படும். ஜெயலலிதாவின் இந்த அரசு இன்றைக்கு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. கல்வி, வேளாண்மை, சாலைவசதி, பொதுப்பணித் துறைப்பணிகள் என அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி காணும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதனை நான் பெருமையோடு இந்த நேரத்தில் கூறி கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து பரவையில் கட்டப்பட உள்ள மதுரை மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கான பூமிபூஜை நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக மதுரை விமான நிலையம் வந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முதல்–அமைச்சர் அங்கிருந்து கார் மூலம் காளவாசல் வந்தார். வழிநெடுகிலும் ஆங்காங்கே வரவேற்பு அளிக்கப்பட்டதால் விழா மேடைக்கு முதல்–அமைச்சர் வருவது சற்று தாமதம் ஆனது. மேலும் காளவாசல் சந்திப்பில் மேளதாளங்கள் முழங்க ஆடல்–பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.