பெண்ணிடம் நூதன முறையில் ரூ.3½ லட்சம் நகைகள் திருட்டு
கடலூர் பஸ்நிலையம் அருகில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ.3½ லட்சம் நகைகளை திருடிச்சென்ற மர்ம மனிதனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடலூர், -
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போடிச்செட்டித்தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி. சம்பவத்தன்று இவர் கடலூர் பஸ்நிலையத்தில் உள்ள நாகம்மன்கோவிலில் சாமிகும்பிட வந்தார். அப்போது அங்கே வந்த மர்ம மனிதர் ஒருவர் ஏன் இவ்வளவு நகைகளை அணிந்து வருகிறீர்கள். யாராவது திருடிவிடப் போகிறார்கள். அவற்றை கழற்றி பையில் வைத்துக்கொள்ளுங்கள் என்று நல்லவர் போன்று நடித்து அறிவுரை கூறினார்.
உடனே கலைச்செல்வி தான் அணிந்திருந்த 2 தங்க சங்கிலி, 4 மோதிரங்கள் என மொத்தம் 17 பவுன் நகைகளை கழற்றி கையில் வைத்திருந்த பையில் போட்டு அதை தனது கூடைப் பையில் வைத்து இருந்தார்.
பின்னர் சாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்கு சென்று நகை வைத்திருந்த பையை பார்த்தபோது அதை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து நகை பையை தேடி பஸ் நிலையத்துக்கு வந்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் கோவிலில் வைத்து கலைச்செல்வியிடம் நகைகளை கழற்றி பையில் வைக்கும்படி அறிவுரை கூறி நல்லவர் போல நடித்த மர்ம மனிதர் தான் நகை பையை திருடிச்சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. பறிபோன நகையின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கலைச்செல்வியின் மகன் சுகுமாறன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம மனிதனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story