பட்ஜெட் போடுவதற்கே தொல்லை: ஆட்சியில் இருப்பவர்களுக்கு தினந்தோறும் போராட்டமாக உள்ளது - நாராயணசாமி

பட்ஜெட் போடவே தொல்லை கொடுத்தார்கள். ஆட்சியில் இருப்பவர்களுக்கு தினந்தோறும் போராட்டமாக உள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
புதுச்சேரி,
புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் நேற்று காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
காமராஜர் உருவப்படத்துக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:–
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை நமக்கு ஒரு படிப்பினை. அரசியல்வாதிகள் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்? என்று வாழ்ந்து காட்டியவர். தமிழகத்தில் 9 ஆண்டுகாலம் முதல்–அமைச்சராக அவர் பதவி வகித்த காலம் பொற்காலம்.
அவரது ஆட்சியில்தான் தமிழகம் தொழில் வளர்ச்சியில் அகில இந்திய அளவில் 2–வது இடத்தை பிடித்தது. பதவியில் இருந்தபோதும் எளிமையை மறந்தது கிடையாது. எதையும் அவர் விளம்பரப்படுத்தவில்லை. வாடகை வீட்டிலேயே வாழ்ந்து மறைந்தார்.
ஒருவர் முதல்–அமைச்சர், அமைச்சர் ஆகிவிட்டால் அவருடன் சொந்தபந்தம் எல்லாம் வந்துவிடும். கட்சிக்காரர்களுக்கு மரியாதை கிடைக்காது. ஆனால் காமராஜர் தனது உறவினர்களை தன்னுடன் வைத்துக்கொள்ளவில்லை. நம்மில் பலருக்கு தேர்தல் வந்தால்தான் தொண்டர்களை பற்றிய நினைப்பு வருகிறது. ஆனால் காமராஜர் தொண்டர்களுடனே வாழ்ந்தார்.
தமிழகத்தில் இப்போது முட்டை ஊழலே ரூ.360 கோடி என்கிறார்கள். ஆசைக்கும் அளவு உண்டு. எல்லை மீறினால் வியாதி வந்துவிடும். இந்தியாவில் இந்திராகாந்தி கொண்டுவந்த அவசரநிலை பிரகடனத்தை கட்சி தலைவராக இருந்த காமராஜர் எதிர்த்தார். அதுபோன்ற தலைவர்களால்தான் கட்சி பலமாக இருந்தது. கட்சியில் நமது சாதனை ஒன்றும் இல்லை.
நேரு, இந்திரகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி, ராகுல்காந்தி போன்ற தலைவர்களின் வழியை நாம் கடைபிடிக்க வேண்டும். காங்கிரசாரைப்போல் ஒரு பாரதீய ஜனதா தலைவராவது நாட்டுக்காக தியாகம் செய்தார்கள் என்பதை கூறமுடியுமா?
புதுவை மாநிலத்தில் இந்த பட்ஜெட் போடவே எவ்வளவோ தொல்லை கொடுத்தார்கள். ஒரு மணிநேரத்தில் முடிய வேண்டிய செயலுக்கு 45 நாட்கள் கோப்புகளை டெல்லியில் வைத்திருந்தார்கள். இருந்தபோதிலும் முடிந்த அளவுக்கு போராடி மக்கள் விரும்பும் பட்ஜெட்டை கொடுத்துள்ளோம். இந்த பட்ஜெட்டில் 16 சதவீத நிதியை அட்டவணை இன மக்களுக்கு கொடுத்துள்ளோம். அதில் ஒரு சல்லிக்காசு கூட வேறு திட்டங்களுக்கு எடுக்கமாட்டோம்.
ஆட்சியில் இருக்கும் எங்களுக்கு தினந்தோறும் போராட்டமாக இருந்து வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் வரி, சொத்து வரியை குறைத்துள்ளோம். மாணவர்களுக்கு உணவு வழங்கும் அட்சய பாத்ரா திட்டத்தை சிலர் எதிர்த்து வருகிறார்கள். ஒரு திட்டத்துக்கு உதவ தனியார் வரும்போது எதிர்ப்பு எதற்கு? தனியார் நிறுவனம் ஒன்றுதான் 60 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்பாடு செய்தது.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் முதல்–அமைச்சரின் நிவாரண நிதி 30 தொகுதிகளுக்கும் செல்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் 3 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. முதியோர் ஓய்வூதியத்தை மாதந்தோறும் தவறாமல் கொடுக்கிறோம்.
ஆனால் அதையெல்லாம் பார்க்காமல் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி பேசுகிறார். உண்மை விவரத்தை நான் சொன்னதும் அவர் பேசவில்லை. இந்த ஆட்சியை கொண்டு வந்த கட்சிக்காரர்களுக்கு நல்லது செய்யும் கடமை எங்களுக்கு உள்ளது. அதனை படிப்படியாக செய்வோம். முதலில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும். அதற்கு காங்கிரசார் கடுமையாக உழைக்கவேண்டும். அவர் பிரதமரானால் புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைக்கும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.